மாடு திருட்டை தடுக்கச் சென்ற ஹரியானவைச் சேர்ந்தவர் முஸ்லீம்களால் கொலையா ?

பரவிய செய்தி
மாடு திருட்டை தடுத்த தந்தையை சுட்டுக்கொன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள். நீதி கேட்டு இரண்டு மகள்களும் செய்த செயல் இந்தியாவை கொந்தளிக்க செய்யப் போகிறது.
மதிப்பீடு
விளக்கம்
ஹரியானா மாநிலத்தில் பசு மாடுகளை திருட வந்த திருடர்களை தடுத்த கோபால் என்பவரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளதாக Tnnews24 என்ற இணைதளத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தனர். இந்த செய்தியை அனுப்பிய யூடர்ன் ஃபாலோயர், அதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, ஹரியானாவில் பசு கொள்ளையர்களால் கொல்லப்பட்ட நபர் குறித்து இணையத்தில் தேடுகையில், அந்த சம்பவம் தொடர்பான செய்திகளை காண முடிந்தது. ஹரியானா மாநிலத்தின் பல்வாள் என்ற பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் ” பசு பாதுகாப்பு அமைப்பை ” சேர்ந்தவர் ஆவார். அவர் மாடுகள் கடத்தப்படுவதை தடுக்க முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டார் எனச் செய்திகளில் இடம்பெற்று இருந்தது.
இந்த சம்பவம் ஜூலை 28-ம் தேதிக்கு பிறகுகே வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. Tnnews24 என்ற இணைதளத்தில் கோபால் கொலை சம்பவம் குறித்த செய்தி ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகி உள்ளது. அதில், கூறப்பட்டுள்ள தகவல்களை ஒன்றன்பின் ஒன்றாக காண்போம்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளா ?
கோபால் கொலை சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்ட டைம்ஸ்நவ்நியூஸ், இந்தியா டுடே, என்டி டிவி மற்றும் swarajya உள்ளிட்ட தளங்களில் கொலையாளி யார் என குறிப்பிடவில்லை. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடவில்லை. ஆனால், Tnnews24 இஸ்லாமியர்கள் தான் கொலை செய்ததாக குறிப்பிட்டு உள்ளனர்.
கொலை எங்கே நடந்தது ?
பசுக்களை திருட வந்த கொள்ளையர்களை தடுத்த கோபாலின் வீட்டிற்கே வந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி கொலை செய்ததாகவும், அருகே முஸ்லீம் மக்களே இருந்ததால் உதவ முன்வரவில்லை என கோபாலின் மனைவி கூறியதாக Tnnews24 தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால், செய்திகளில் மாடுகளை திருடிச் சென்றவர்களை வாகனத்தில் துரத்தி சென்ற பொழுது Hodal-Nuh நெடுஞ்சாலை பகுதியில் பசு கொள்ளையர்களால் கோபால் சுடப்பட்டதாகவும், தங்களின் அமைப்பிற்கு அவர் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்து இருந்ததாகவும் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த கொலை சம்பவத்திற்கு பின்னால் நிச்சயம் பசு கொள்ளையர்கள் தான் இருப்பதாக கோபால் குடும்பத்தினர் குற்றம்சாற்றியுள்ளனர்.
ஹரியானாவில் கோபால் கொலை சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, ஹரியானாவில் பசு கொள்ளையர்களால் கோபால் கொலை செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை காண முடிந்தது.
Tnnews24 தளத்தில் கூறுவது போன்று, கொலை கோபால் வீட்டின் முன்பு நிகழவில்லை, நெடுஞ்சாலை பகுதியில் நிகழ்ந்துள்ளது. கொலை குற்றவாளிகள் யார் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இஸ்லாமியர்கள் அடிப்படைவாதிகள் கொலை செய்ததாக தலைப்பில் வைத்துள்ளனர். கொலையாளி யார் என்ற விவரம் அறியாமல் இவர்களாகவே ஒரு செய்தியை வெளியிட்டு உள்ளனர்.
கொலை செய்தது யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால், உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு இந்து-முஸ்லீம் பிரச்சனையை உருவாக்கவே முயல்கின்றனர் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது இந்த செய்தி.