கோபி அருகே தமிழர்களுக்கு வேலை வழங்கக்கூடாது என வடமாநிலத்தவர்கள் போராட்டம்.. உண்மை என்ன ?

பரவிய செய்தி
கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ளூர் தமிழ் பணியாளர்களுக்கு வேலை வழங்க வட மாநிலத்தவர் எதிர்ப்பு: அவர்களால் வடமாநிலத்தவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டம்.
மதிப்பீடு
விளக்கம்
கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள தனியார் நூற்பாலையில் உள்ளூர் பணியாளர்களுக்கு வேலை வழங்கக் கூடாது என்றும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வடமாநிலத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஒன் இந்தியா மற்றும் நியூஸ் தமிழ் 24×7 உடைய நியூஸ் கார்டுகள் சமூகவலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
“ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே வெள்ளாளப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, அந்த தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்த ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளி கசரப் என்பவர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தொழிலாளி காணவில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே கோபிச்செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் தொழிலாளர்கள் தரப்பில் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு காணாமல் போன தொழிலாளியை தேடி வருகின்றனர்.
இந்நிலையில்ம் நூற்பாலை நிர்வாகம் தரப்பில் காணாமல் போன தொழிலாளியை கண்டுபிடிக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கண்டித்து அங்கு பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் ” என தினத்தந்தி, Etv பாரத் உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
ஆனால், உள்ளூர் தமிழர்களுக்கு வேலை வழங்க வடமாநிலத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக பரவும் செய்தி குறித்து கோபிச்செட்டிப்பாளையம் காவல்துறை தரப்பை தொடர்பு கொண்டு பேசிய போது அதை மறுத்து இருந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறை தரப்பில் கூறுகையில், ” 21 வயதான கசரப் என்ற தொழிலாளி காணாமல் போனதாக காவல்நிலையத்தில் தொழிலாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு தேடி வருகிறோம். இந்நிலையில், தொழிலாளியை காணாமல் போனது தொடர்பாக கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளிருந்து ஆர்ப்பாட்டத்தில் இருந்து விட்டு பின்னர் பணிக்கு சென்று விட்டனர்.
உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதற்கு எதிராக வடமாநிலத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது. ஏற்கனவே அந்த நூற்பாலையில் உள்ளூர் தொழிலாளர்களும், பிற மாநில தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர் ” எனத் தெரிவித்து இருந்தனர்.
முடிவு :
நம் தேடலில், கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ளூர் பணியாளர்களுக்கு வேலை வழங்க வட மாநிலத்தவர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகப் பரப்பப்படும் செய்தி தவறானது. அங்கு காணாமல் போன வடமாநில தொழிலாளியை கண்டுபிடிக்கக் கூறி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் என அறிய முடிகிறது.