இலங்கையை விட இந்தியாவில் விலைவாசி இருமடங்கு உயர்வு என கோத்தபய ராஜபக்சே கூறினாரா ?

பரவிய செய்தி
இந்தியர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். இலங்கையை விட இந்தியாவில் விலைவாசி இருமடங்காக உயர்ந்திருக்கிறது. ஆனாலும் இந்தியர்கள் குறிப்பாக பெரும்பான்மை இந்துகள் தேசநலனுக்காக பொறுமை காக்கின்றனர் – கோத்தபய ராஜபக்சே
மதிப்பீடு
விளக்கம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாடே பெரும் சிக்கலில் உள்ளது. நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியிலும், அரசிலும் உள்ளவர்கள் தங்கள் பதவிகளை ராஜினமா செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், ” இலங்கையை விட இந்தியாவில் விலைவாசி இருமடங்காக உயர்ந்திருக்கிறது. ஆனாலும் இந்தியர்கள் குறிப்பாக பெரும்பான்மை இந்துகள் தேசநலனுக்காக பொறுமை காக்கின்றனர் ” என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியதாக தந்திடிவி நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
இலங்கையை விட இந்தியாவில் விலைவாசி உயர்வு என கோத்தபய ராஜபக்சே கூறியதாக தந்திடிவி சேனலில் எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.
மாறாக, “இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போரிடம் ஆட்சியை ஒப்படைக்க தயார் – கோட்டபய ராஜபக்ச ” என்ற செய்தி கார்டே ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகி இருக்கிறது .
மேற்காணும் நியூஸ் கார்டில், இந்தியாவின் விலைவாசியை பற்றி கூறியது போன்று போலியான செய்தியை எடிட் செய்து பரப்பி உள்ளனர். வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது என தந்தி டிவி செய்தியும் தெரிவித்து உள்ளது.
முடிவு :
நம் தேடலில், இலங்கையை விட இந்தியாவில் விலைவாசி இருமடங்காக உயர்ந்திருக்கிறது. ஆனாலும் இந்தியர்கள் குறிப்பாக பெரும்பான்மை இந்துகள் தேசநலனுக்காக பொறுமை காக்கின்றனர் என கோத்தபய ராஜபக்சே கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது