தேர்தலில் வெற்றிப் பெறாத அண்ணாமலை அறிவுரை கூற வேண்டாம் என ஆளுநர் ரவி பேசியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
எனக்கு யாரும் அறிவுரை கூற வேண்டாம்: ஆளுநர்; தேர்தல் அரசியலில் வெற்றி பெற முடியாத அண்ணாமலை நான் அரசியல் பேசக்கூடாது என்று அறிவுரை கூற தேவையில்லை. நாக்பூரின் உத்தரவுப்படியே நான் நடக்கின்றேன் – தமிழ் நாடு ஆளுநர் ஆர். என்.ரவி
மதிப்பீடு
விளக்கம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் அறக்கட்டளை சார்பில் 39 ஜோடிகளுக்கு நடந்த திருமண விழாவில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று (ஜூலை 05) கலந்துகொண்டார். அப்போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஆளுநர் செய்தியாளர்களை சந்திக்கக்கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு. அவர் அரசியல் பேசக்கூடாது. இதில் நான் தெளிவாக இருக்கிறேன்.” என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இந்நிலையில், “எனக்கு யாரும் அறிவுரை கூற வேண்டாம். தேர்தல் அரசியலில் வெற்றி பெற முடியாத அண்ணாமலை நான் அரசியல் பேசக்கூடாது என்று அறிவுரை கூற தேவையில்லை” என ஆளுநர் பேசியதாக நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஆளுநர் அரசியல் பேசகூடாது… ~ஆடு புருஷ்..
இப்போ 👇 தும்முனா தான் சரியா இருக்கும்..
😝😝 pic.twitter.com/XrlrLywPIg— Raju Bhai (@rajubhai_DMK) July 5, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், ஆளுநர் பேசியது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வருவது போன்று அவர்கள் எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
#JUSTIN ஆளுநர் அரசியல் பேசக்கூடாது: அண்ணாமலை#Annamalai #TNGovernor #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/CWMniYCXTO
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 5, 2023
மாறாக, நியூஸ் 18 தமிழ்நாடு பக்கத்தில், “ஆளுநர் அரசியல் பேசக்கூடாது: அண்ணாமலை” எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட நியூஸ் கார்டு கிடைத்தது. அதில் “தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் பதில் சொல்ல ஆளுநர் அரசியல்வாதி அல்ல ஆளுநர் செய்தியாளரை சந்திப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது, கடமையைச் செய்ய வேண்டும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களிலும் ஆய்வு செய்து பார்த்ததில், அண்ணாமலை பேசியது குறித்து ஆளுநர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது உறுதியானது.
இதன்மூலம், “ஆளுநர் அரசியல் பேசக்கூடாது: அண்ணாமலை” எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட ‘நியூஸ்18 தமிழ்நாடு’ ஊடகத்தின் நியூஸ் கார்டை, “எனக்கு யாரும் அறிவுரை கூற வேண்டாம்” என ஆளுநர் கூறிவது போல எடிட் செய்து பரப்பியுள்ளனர்.
மேலும் படிக்க : தீட்சிதர்களை மீறி பொதுமக்கள் கனகசபையில் கால் வைக்கக்கூடாது என அண்ணாமலை கூறியதாகப் போலிச் செய்தி !
மேலும் படிக்க : ராமர் கோவில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !
முடிவு:
நம் தேடலில், “எனக்கு யாரும் அறிவுரை கூற வேண்டாம்” என அண்ணாமலைக்கு எதிராக ஆளுநர் பேசியது போல பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.