ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்த பின் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தியதாகப் பரவும் பொய் செய்தி !

பரவிய செய்தி
சட்ட சபையிலிருந்து வெளிநடப்பு செய்த ஆளுனர் ரவி அவர்கள் வெளியே வந்த உடன் இசைக்கப்பட்ட “தேசிய கீதத்திற்கு” மரியாதை செலுத்தினார்.
மதிப்பீடு
விளக்கம்
கடந்த 9ம் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அவரது உரையில் சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் முதலான பல்வேறு சொற்களைத் தவிர்த்ததால், தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு அச்சிடப்பட்ட உரை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
@arivalayam உ.பி.களின் தில்லாலங்கடி அம்பலம்…
சட்ட சபையில் இருந்து வெளிநடப்பு செய்த மேதகு. தமிழக ஆளுநர் ரவி அவர்கள் வெளியே வந்த உடன் இசைக்கப்பட்ட "தேசிய கீதத்திற்கு" மரியாதை செலுத்தினார்…@annamalai_k @karthiyayiny7 @ShivaaBJYM pic.twitter.com/KZ0GpEpZOo
— Bhuvanesh Kumar (@hbhuvanesh001) January 13, 2023
இதனையடுத்து ஆளுநர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். இந்நிலையில் சட்டசபையில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் வெளியேறிவிட்டார் என பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.
சட்ட சபையில் இருந்து வெளிநடப்பு செய்த மேதகு ஆளுனர் ரவி அவர்கள் வெளியே வந்த உடன் இசைக்கப்பட்ட "தேசிய கீதத்திற்கு" சட்டசபை வாசலிலேயே மரியாதை செலுத்தினார்.
Jai Hind 🇮🇳 pic.twitter.com/D2fLZVMFlX
— K P K Mahidhara (@mahicbe) January 13, 2023
ஆனால், ஆளுநர் வெளியில் வந்ததும் தேசிய கீதம் இசைப்பதைக் கேட்டு சட்டசபை வாசலில் நின்று மரியாதை அளித்துள்ளார். இதனைப் பார்த்ததும் அங்கிருந்த பாதுகாப்பு வீரர்கள் அவருக்கு மரியாதை கொடுத்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
ஆளுநர் சட்டசபையிலிருந்து வெளியில் வந்ததும் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தியதாகப் பரவும் வீடியோவில் ‘Desam News’ என்று இருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த யூடியூப் பக்கத்தில் அவ்வீடியோ கடந்த ஜனவரி 12ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், சட்டசபை ஆளுநர் கலந்து கொண்டதோ ஜனவரி 9ம் தேதி.
சட்டசபை நிகழ்வு குறித்த முழு வீடியோவினை ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ யூடியூப் பக்கத்தில் காண முடிந்தது. அதில், ஆளுநர் சட்டசபைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, ஆளுநர் உரை தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஆளுநரின் உரை குறித்து தீர்மானத்தை வாசிக்கிறார். அப்போது ஆளுநர் வெளிநடப்பு செய்கிறார்.
அதன் பிறகு சட்டசபையில் தேசிய கீதம் பாடப்படுகிறது. இந்த நிகழ்வின் போது ஆளுநர் சட்டசபைக்குள் இல்லை. இது குறித்து ‘பிபிசி தமிழ்’ டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
ஆளுநர் உரை தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததால், தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி. pic.twitter.com/nnnHLI2KjG
— BBC News Tamil (@bbctamil) January 9, 2023
பரவக்கூடிய வீடியோ குறித்து மேலும் தேடியதில், ‘தந்தி டிவி’ யூடியூப் பக்கத்தில் “ஆளுநருக்கு பேண்டு, வாத்தியங்களுடன் காவல்துறை அணிவகுப்பு மரியாதை” என்ற தலைப்பில் வீடியோ கிடைத்தது. அந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்பதை Youtube upload time என்ற Extension கொண்டு தெரிந்து கொள்ள முயன்றோம்.
அவ்வீடியோ ஜனவரி 9ம் தேதி காலை 10 மணி அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வீடியோவின் 32வது வினாடியில் “ஆளுநர் உரையுடன் சற்று நேரத்தில் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இந்த வீடியோ சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஆளுநருக்கு அளிக்கப்பட காவல்துறை அணிவகுப்பு மரியாதையின்போது எடுக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும் படிக்க : ஆளுநர் உரை குறித்து எந்த விளக்கமும் ஆளுநர் மாளிகை அளிக்கவில்லை!
இதேபோல், ஆளுநர் உரை குறித்து ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானது. அப்படி எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை என ஆளுநர் மாளிகையிலுள்ள மக்கள் தொடர்பு அலுவலகத்திடம் (PRO) தொலைப்பேசி வாயிலாக விளக்கம் கேட்டும் யூடர்ன் செய்தி வெளியிட்டிருந்தது.
முடிவு :
நம் தேடலில், ஆளுநர் சட்டசபையிலிருந்து வெளியேறும் போது தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ உண்மை அல்ல. அது ஆளுநர் சட்டசபை வருகையின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.