திமுக ஆட்சியில் படிக்கட்டு இல்லாமல் இயங்கும் அரசுப் பேருந்து என பாஜகவினர் பரப்பும் 2018ல் எடுத்த வீடியோ !

பரவிய செய்தி
புளியங்குடி – தென்காசி தடத்தில் பயணிகள் படியில் நிற்காமல் இருக்க புதிய மாடல் பேருந்து அறிமுகம்! சேலையூரில் பள்ளி வாகனம் ஒன்றின் ஓட்டை வழியாக விழுந்து, ஒரு குழந்தை உயிரிழந்த வடு இன்னமும் மறையவில்லை! இந்த படிக்கட்டு இல்லா அரசுப் பேரூந்து எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறதோ?
Twitter link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் பழுதாகும் போதும், சேதமடைந்த நிலையில் இயக்கப்படும் போது எடுக்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் உடன் வைரல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், திமுக ஆட்சியில் புளியங்குடி மற்றும் தென்காசி தடத்தில் இயங்கும் அரசு பேருந்தில் பயணிகள் நிற்க படிக்கட்டே இல்லை எனக் கூறி படிக்கட்டு இல்லாமல் சென்றுக் கொண்டிருக்கும் பேருந்தின் வீடியோ ஒன்றை தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினர் செளதாமணி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
படிகள் இல்லாத ஆபத்தான நிலையில் ஓடும் அரசு பேருந்து – வைரலாகும் வீடியோ #tn #tamilnadu #dindugal #tngovt #tamilnadugovernment@mkstalin @CMOTamilnadu @sivasankar1ss pic.twitter.com/PYlXNszZbQ
— SathiyamTv (@sathiyamnews) May 26, 2023
Archive link
மேலும், இந்த வீடியோவை திண்டுக்கல் எனக் குறிப்பிட்டு சத்தியம் டிவி சேனலும், பாஜகவினரின் பதிவைக் குறிப்பிட்டு மீடியான் இணையதளமும் பதிவிட்டு உள்ளனர்.
உண்மை என்ன ?
புளியங்குடி to தென்காசி என்ற கீ வார்த்தைகளைக் கொண்டு சமூக வலைதளங்களில் தேடுகையில், 2018ம் ஆண்டே இந்த வீடியோ வைரல் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை பார்க்க முடிந்தது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது.
மேலும், வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், 2018ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி இதே சத்தியம் டிவி சேனலின் ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வீடியோ பதிவாகி இருந்துள்ளது. அதில், படிக்கட்டு இல்லாத பேருந்து – அதிர்ச்சி காட்சி. பேருந்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை. புளியங்குடி to தென்காசி, திருநெல்வேலி ” என இடம்பெற்று உள்ளது.
இந்த செய்தியை வெளியிட்ட சத்தியம் டிவி சேனலே சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகிய வீடியோவை தவறான செய்தியாக வெளியிட்டு இருக்கிறது.
மேலும் படிக்க : 2018ல் உடைந்த அரசு பேருந்து படிக்கட்டு படத்தை திமுக ஆட்சி எனப் பரப்பும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ !
இதற்கு முன்பாக, 2018ல் உடைந்த அரசு பேருந்தின் படிக்கட்டு புகைப்படத்தை திமுக ஆட்சி எனக் கூறி அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவே தவறாகப் பரப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், புளியங்குடி – தென்காசி தடத்தில் பயணிகள் படியில் நிற்காமல் இருக்க புதிய மாடல் பேருந்து அறிமுகம் என பாஜகவினர் பரப்பும் வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டது அல்ல. அந்த வீடியோ 2018ல் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.