This article is from Jul 22, 2019

அரசு நீட் பயிற்சி பெற்ற 19,335 மாணவர்களில் ஒருவருக்கு கூட சீட் கிடைக்கவில்லையா ?

பரவிய செய்தி

தமிழகத்தில் அரசு சார்பில் அளிக்கப்பட்ட நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 19 ஆயிரம் மாணவர்களில் ஒருவருக்கு கூட அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை.

மதிப்பீடு

சுருக்கம்

அரசு நீட் பயிற்சி மையத்தின் மூலம் பயிற்சி வழங்கப்பட்ட 19,335 மாணவர்களில் 2 பேருக்கு  இடம் கிடைத்து இருக்கிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருக்கிறார்.

விளக்கம்

ருத்துவப் படிப்பிற்கு தேசிய அளவில் நீட் எனும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் வேறு வழிகள் இன்றி மாணவர்களும் நீட் தேர்வை எதிர்கொண்டு வருகின்றனர். இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வதில் மிகப்பெரிய அளவில் சிரமங்கள் இருக்கிறது.

இந்நிலையில் தான், தமிழக அரசு சார்ப்பில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக அரசு நீட் பயிற்சி மையங்கள் மூலமாக நீட் தேர்விற்கான பயிற்சிகள் ஏற்படுத்தி தரப்பட்டன. இந்த முயற்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஸ்பீட் மருத்துவ நிறுவனம் ஒன்றிணைந்து தமிழகத்தில் 412 இடங்களில் நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில், பயிற்சி அளிக்கப்பட்ட 19,000 மாணவர்களில் சுமார் 2,747 மாணவர்களுக்கு வீடு தேடி சென்று பயிற்சி அளிக்கப்பட்டன. இதற்காக தமிழகத்தில் 14 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இப்படி அரசு சார்பில் நீட் பயிற்சி பெற்ற 19,335 மாணவர்களில் ஒருவருக்கு கூட முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வில் சீட் கிடைக்கவில்லை என்ற செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

கடந்த முறை அரசு பள்ளியில் பயின்ற 3 பேருக்கும், அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற 4 பேருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இம்முறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் உமாசங்கர். அவரின் நீட் மதிப்பெண் 440.

2018-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் நீட் தேர்வு பயிற்சி மையத்தை துவங்கி வைத்த தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ஆண்டிற்கு 500 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வழிவகை செய்யப்படும் ” எனத் தெரிவித்து இருந்தார்.

ஆனால், இன்று 19,335 மாணவர்களில் ஒருவருக்கு கூட அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

சென்னை ராயபுரத்தில் அமைச்சர் அளித்த பேட்டியில், ” மதிப்பெண் அடிப்படையில் நான் சொல்வது, சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் அதிகமாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 700-ல் இருந்து 300 வரையில் தான் மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு செல்லும் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைத்து இருக்கிறது. தேர்வு என்பது வேறு மதிப்பெண் என்பது வேறு என்பது உங்களுக்கு தெரிய வேண்டும்.

முதன் முதலில் நமது அரசின் சார்பாக, நீட் தேர்விற்காக பயிற்சி அளித்து இருக்கிறோம். படிப்படியாக, ஆண்டுதோறும் பயிற்சி பெறும் பொழுது, இந்த ஆண்டு 2 மாணவர்களுக்கு இடம் கிடைத்து இருக்கிறது. ஒருவருக்கும் இல்லை எனக் கூறி விட முடியாது. அந்த பட்டியலை வேண்டும் என்றாலும் உங்களுக்கு தருகிறேன் ” எனத் தெரிவித்து இருந்தார்.

அரசு நீட் பயிற்சி மையத்தின் மூலம் பயிற்சி வழங்கப்பட்ட 19,335 மாணவர்களில் 2-பேருக்கு மட்டுமே இடம் கிடைத்து இருக்கிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருக்கிறார். எனினும், இத்தனை ஆயிரம் மாணவர்களில் 2 பேருக்கு மட்டுமே சீட் கிடைத்து இருக்கிறது.

2016-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான தேர்ந்தெடுக்கும் முறையில் தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 2,744 இடங்களில் 30 இடங்களை அரசு பள்ளி மாணவர்கள் பெற்றனர். நீட் தேர்வுக்கு முன்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ சீட்கள் எண்ணிக்கை 30 என்ற அளவில் இருந்து உள்ளது. ஆனால், நீட் தேர்விற்கு பிறகு தமிழக அளவில் 2 அல்லது 3 என ஒற்றை இலக்கத்தில் மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பினை பெறுகின்றனர்.

நீட் தேர்வு தனியார் பயிற்சி மையங்களை அதிக அளவில் உருவாக்கி உள்ளது. இனிவரும் காலங்களில் தனியார் பயிற்சி மையங்களை மட்டுமே நம்பி நீட் தேர்வுகளின் வெற்றி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader