அரசு பள்ளி புத்தக பைகளில் ஜெ, இபிஎஸ் படம் மீது திமுக ஸ்டிக்கர் ஒட்டியதா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா புத்தகப் பைகளில்(ஸ்கூல் பேக்) இடம்பெற்றுள்ள முன்னாள் அதிமுக முதல்வர்கள் ஜெ.ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்களை மாற்ற வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், மாணவர்களுக்கு வழங்கும் புத்தக பைகளில் ஜெயலலிதா மற்றும் இபிஎஸ் படம் மீது திமுக அரசின் ஸ்டிக்கர் ஒட்டி வழங்கப்படுவதாக திமுக எம்.பி கனிமொழி பள்ளி மாணவியர்களுக்கு புத்தக பைகளை அளிக்கும் புகைப்படம் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
அன்று சில்லறையை சிதற விட்டவர்கள் கவனத்திற்கு 😤😑#புளுகுமூட்டை_திமுக pic.twitter.com/QpOqtOOirt
— Real Pix (@RealPix10) December 30, 2021
அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மற்றும் பாஜக ஆதரவு பக்கங்களும் இத்தகைய மீம்ஸ் பதிவை பகிர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
உண்மை என்ன ?
நடப்பு கல்வியாண்டில் தமிழக பள்ளிகள் அனைத்தும் அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் உள்ளன. அரையாண்டு தேர்வு வரை முடிந்த நிலையில் விடுமுறையில் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு புதிதாக ஏன் விலையில்லா புத்தகப் பைகளை அளிக்கப் போகிறார்கள்.
திமுக எம்.பி கனிமொழி புத்தக பைகளை வழங்கிய குறித்து தேடுகையில் டிசம்பர் 28-ம் தேதி அவருடைய ட்விட்டர் பக்கத்தில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் திருமிகு. G. கோவிந்தம்மா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று 500 மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன் ” என பதிவிட்ட பதிவில் வைரலாகும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் திருமிகு. G. கோவிந்தம்மா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று 500 மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். (1/2) pic.twitter.com/azXaAtvGpL
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 28, 2021
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தக பைகள் வெவ்வேறு நிறங்களில் இருக்கின்றன. புத்தக பைகள், வாட்டர் பாட்டில்கள் மட்டுமின்றி மகளிருக்கு ஹாட் பாக்ஸ் போன்ற பொருட்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.
கட்சி சார்பாக வழங்கப்படும் புத்தக பைகளில், திமுக கட்சித் தலைவர்கள் மு.க.ஸ்டாலின், கனிமொழி, எம்.எல்ஏ உதயநிதி ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமின்றி அதை ஏற்பாடு செய்த கட்சியினர் புகைப்படமும் கூட இடம்பெற்று உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தக பைகளுக்கும், கட்சி சார்பில் வழங்கப்படும் புத்தக பைகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் வதந்தியைப் பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், திமுக கட்சி சார்பில் பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட புத்தக பைகளில் கட்சித் தலைவர்களின் படங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டியதை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தக பைகளில் ஜெயலலிதா மற்றும் இபிஎஸ் படம் மீது திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டியதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்.