அரசு பள்ளியில் சாராயம் காய்ச்சிய 5 திமுகவினர் கைதா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தில் அரசு பள்ளியில் சாராயம் காய்ச்சிய பெண்கள் உட்பட 5 திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளதாக செய்தித்தாள் பக்கம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விடியலின் பரிதாபங்கள்😂😂😂 pic.twitter.com/WByoqSc1uv
— Real Pix (@RealPix10) January 17, 2022
வைரல் செய்யப்படும் செய்தித்தாள் மே 28-ம் தேதி வெளியாகி இருக்கிறது. அதில் உள்ள செய்தியை வைத்து தேடிய போது கடந்த மே மாதமே இந்த செய்தித்தாள் பக்கம் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு இருக்கிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் செய்தித்தாளில் உள்ள தலைப்பை வைத்து தேடிப்பார்க்கையில், 2021 மே 28-ம் தேதி தினமலர் இணையதளத்தில் ” அரசு பள்ளியில் சாராயம் காய்ச்சிய பெண்கள் உட்பட 5 பேர் கைது ! ” என்ற செய்தியே கிடைத்தது. ஆனால், அந்த செய்தியில் கைது செய்யப்பட்டவர்கள் திமுகவினர் என தலைப்பிலோ அல்லது செய்தி உள்ளேயோ குறிப்பிடவில்லை.
செய்தியில், ” திருப்பூர் மாவட்டம், கருமாபாளையம் ஊராட்சி செம்பாக்கவுண்டம் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக அவிநாசி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் முரளிக்கு தகவல் கிடைத்தது. அங்கு எஸ்.ஐ.க்கள் சர்வேஸ்வரன், ஜெகதீசன் உள்ளிட்ட போலீசார் நேற்று அதிகாலை 2.00 மணிக்கு திடீர் ரெய்டு நடத்தினர். பள்ளி கழிப்பறை அருகே சிலர் காஸ் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் 55, ஆறுச்சாமி 65, விக்னேஸ்வரன் 28, காயத்ரி 23, சரசாள் 45 என்பது தெரிய வந்தது. இவர்கள் கைது செய்யப்பட்டனர். 10 லிட்டர் சாராயம், 50 லிட்டர் ஊறல் பறிமுதல் செய்ய்யப்பட்டது. கைதான ஆண்கள் திருப்பூர் சிறையிலும், பெண்கள் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
2 பெண்கள் கைது : திருச்சி, ராம்ஜி நகர் பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பது தெரிந்தது. 3 லிட்டர் சாராயம், 165 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்தனர். சாராயம் காய்ச்சி விற்றதாக விமலாதேவி 50, ஜீவிதா 35 ஆகிய இருவரையும் கைது செய்தனர் ” என அதே புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.
இதேபோல் 2021 மே 28-ம் தேதி வெளியான தினமணி செய்தியிலும், ” அரசு பள்ளியில் சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது ” என்றே புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், அரசு பள்ளியில் சாராயம் காய்ச்சிய பெண்கள் உட்பட 5 திமுகவினர் கைது எனப் பரப்பப்படும் செய்தித்தாள் எடிட் செய்யப்பட்டது. அந்த செய்தியை வெளியிட்ட தினமலர் இணையதளத்தில் திமுகவினர் கைது செய்யப்பட்டதாகக் கூறவில்லை. செய்தித்தாளில் எடிட் செய்து வதந்தி பரப்பி இருக்கிறார்கள் என அறிய முடிகிறது.