அரசு பள்ளிகள், நீட் குறித்து நடிகர் சூர்யா பேசியதாக பாஜகவினர் பரப்பும் 2019-ல் வெளியான பழைய செய்தி !

பரவிய செய்தி
பல்வேறு அரசுப் பள்ளிகள் ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குகிறது; ஆசிரியர்களே இல்லாத அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள்? – நடிகர் சூர்யா
மதிப்பீடு
விளக்கம்
மாணவர்கள் மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு National Entrance Cum Eligibilty Test எனும் நீட் தேர்வு கடந்த 2019-ல் இருந்து இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகளும், கல்வி நிறுவனங்களும் இன்றுவரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நீட் எதிர்ப்பாளர்களில் ஒருவரான நடிகர் சூர்யா “பல்வேறு அரசுப் பள்ளிகள் ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குகிறது, ஆசிரியர்களே இல்லாத அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள்?” என்று கூறியதாக பாலிமர் செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று அதிமுக மற்றும் பாஜகவினரால் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
ஆசிரியர்களே இல்லாத அரசு பள்ளிகளில் மாணவர்கள் எப்படி நீட் தேர்வை எழுதுவார்கள் ணு கேட்க தெரிஞ்ச உனக்கு அரசு பள்ளியில் ஏன் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கு ணு கேட்க தெரியல பாத்தியா??? pic.twitter.com/a86ntMS4gN
— Mr Indian (@DuvvadaSivabav1) July 19, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் செய்தி குறித்து பாலிமர் செய்தியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடியதில், கடந்த 2019 ஜூலை 13 அன்று “சமமான கல்வியை வழங்காமல் தரத்தை எப்படி உயர்த்த முடியும்? – நடிகர் சூர்யா” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் அதே நியூஸ் கார்டை பாலிமர் செய்தி வெளியிட்டிருந்தது.
சமமான கல்வியை வழங்காமல் தரத்தை எப்படி உயர்த்த முடியும்? – நடிகர் சூர்யா#Actor #Surya #NEET #MBBS #MedicalEntrance | #Polimer #Polimernews #News
Read more : https://t.co/jNrW6qrVKH pic.twitter.com/ihwP030XKY— Polimer News (@polimernews) July 13, 2019
கடந்த 2019 மே 31 அன்று டாக்டர் கே. கஸ்தூரிரங்கன் தலைமையில் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு குறித்து கருத்து தெரிவிக்க கடந்த 2019 ஜூலை 31 வரை பொதுமக்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய நடிகர் சூர்யா, “நாங்கள் 10 வருடங்களாக மாணவர்களைப் பார்த்து வருகிறோம். 10 வருடங்களாக, 30% மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். 30% +2 மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படி நீட் எழுதுவார்கள்?
மேலும் பள்ளித் தேர்வுகளில் மூன்றாவது, ஐந்தாவது, எட்டாம் வகுப்புகளில் பொதுத் தேர்வுகளை நடத்தவுள்ளார்கள். ஒரு தேர்வைச் சரியாகச் சந்திக்க முடியாமல் போனால் பள்ளியை விட்டே மாணவர்கள் சென்றுவிடுகிறார்கள்.” என்று கூறி நீட் தேர்விற்கும், தேசிய கல்விக் கொள்கைக்கும் எதிராக அவர் பேசியது குறித்து கடந்த 2019 ஜூலை 19 அன்று ‘BBC தமிழ்’ கட்டுரை வெளியிட்டுள்ளது.
மேலும் தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு, கடந்த 2020 ஜூலை 29 அன்று ஒன்றிய அரசின் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த 2021 மே 07 அன்று ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான அரசு, இதனை தமிழ்நாட்டில் அமல்படுத்த முடியாது என அறிவித்து, தமிழ்நாட்டிற்கு தனியாக மாநில கல்வி கொள்கையை உருவாக்கி வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் போடப்பட்ட ஆபத்தான சாலை எனப் பரப்பப்படும் 2015ல் பரவிய பழைய வீடியோ !
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையில் பௌத்த மதச்சின்னம் கொண்டு வந்ததாகப் பரப்பப்படும் பொய் !
முடிவு:
நம் தேடலில், ஆசிரியர்களே இல்லாத அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள் என சூர்யா பேசியதாகப் பரவி வரும் பாலிமர் செய்தியின் நியூஸ் கார்டு 2019ல் வெளியான பழைய செய்தி. அது தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக அவர் பேசிய போது வெளியிடப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.