This article is from Sep 30, 2018

கிராம சபையை தடுத்தார்களா? 8 வழி பயம்?

பரவிய செய்தி

சேலம் முதல் சென்னை வரையிலான பசுமை வழிச் சாலைக்கு எதிராக சாலை அமைய உள்ள கிராமங்களில் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 15-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

கிராம சபைக் கூட்டம் ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 01, ஆகஸ்ட் 15 , அக்டோபர்  02 ஆகிய நான்கு நாட்கள் நடைபெறும். கிராமங்களில் தங்கள் வாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்துவதை, மக்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற கிராம சபை கூட்டம் பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

சேலம் முதல் சென்னை( தாம்பரம்) வரையிலான எட்டு வழிச் சாலை ரூ.10,000 கோடி மதிப்பில் அமைய உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு எழுந்தாலும் போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடுகள் முடிவடைந்தன. இந்த திட்டம் தேவையில்லை என நேரடி போராட்டமாகவும், வழக்குகள் மூலமாகவும் மக்கள் சந்தித்து வருகின்றனர்.

expressway

இந்நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி நடக்கும் கிராம சபை கூட்டத்தில் எட்டு வழிச் சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என பல கிராம மக்களும் தயாராக இருந்தனர். அரசுக்கு எதிரான தீர்மானம் என்பதால் ஊராட்சி அதிகாரிகள் தீர்மானம் நிறைவேற்ற எப்படியும் தடுக்க நினைப்பர் அல்லது தவிர்க்க நினைப்பர் என்று மக்கள் அறிந்து இருந்தனர்.

திருவண்ணாமலை செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் கிராமத்தில் எட்டு வழிச் சாலைக்கு எதிராக தீர்மானம்நிறைவேற்றப்பட வேண்டும் என மக்கள் முழக்கமிட்டனர். ஆனால், அதை ஏற்காமல் அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.

நரசிங்கநல்லூர், அந்தனூர், நயம்பாடி, சிருகலாம்பாடி, மேல்ராவந்தவாடி, தொரப்பாடி, சி.நம்மியந்தல் ஆகிய கிராமங்களில் மக்களிடம் மனுக்களை மட்டுமே அதிகாரிகள் பெற்று சென்றுள்ளன. தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இதில், சி.நம்மியந்தல்  கிராமத்தில் உள்ள மக்கள் அதிகாரிகளை மூன்று மணி நேரம் சிறைபிடித்து வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 20-க்கும் அதிகமான கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.

” திருவண்ணாமலையில் உள்ள தென்னரகம், ராந்தம், பெலாத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மட்டும் கிராமங்களில் அமைய உள்ள எட்டு வழிச் சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தும், அதற்கான நகலை அளிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் ”

” 8 வழிச் சாலைக்காக திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், விமான நிலையம் விரிவாக்க பணியால் கிராமங்கள் கையகப்படுத்தப்படும் என்பதால் விரிவாக்க பணிகள் தேவையில்லை என்றும் சேலம் நிலவாரப்பட்டியில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ”

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சியில் உள்ள வளையங்கரணை கிராமத்தில் 2 கி.மீ தொலைவிற்கு 8 வழிச் சாலை அமைவதால் அதற்காக மக்கள் வீடுகள் மற்றும் நிலங்களை இழக்க நேரிடும். ஆகையால், திட்டமானது குடியிருப்பு மற்றும் விளைநிலங்களை பாதிக்காத வகையில் மாற்றி அமைக்கும்படி தீர்மானம் கொண்டு வந்தனர். மாற்று பாதையில் திட்டம் செல்ல வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராம சபை கூட்டம் குறித்து மக்களுக்கு உண்டான விழிப்புணர்வால் தங்களுக்கு நிகழும் பாதிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி அதை சரி செய்யும் முறையை தெரிந்து கொண்டுள்ளனர். கேரளாவில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கோக்க-கோலா நிறுவனத்தை அகற்ற கிராம சபை தீர்மானம் பெரும் உதவியாக இருந்தது.

ஒரு திட்டம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும் சட்ட விதிகளுக்கு புறம்பான ஒன்றாக இருந்தாலும் அதன் மீதான தீர்மானம் உறுதியாக நிறைவேற்றப்படும்.

கிராம சபை தீர்மானத்தை தடுப்பதும், கிராம சபை நடத்தப்படாமலும் பார்த்துக் கொள்ளுவதும் சட்ட விரோதம் அல்லவா? ஜனநாயக உரிமைகள் கேள்விக் குறி ஆகலாமா???

Please complete the required fields.




Back to top button
loader