பாகிஸ்தானில் பெண்ணின் கல்லறையைப் பூட்டிய பெற்றோர்கள் எனத் தவறான செய்தியைப் பரப்பிய முக்கிய ஊடகங்கள் !

பரவிய செய்தி

பெண் சடலங்களை தோண்டி எடுத்து பாலியல் வன்கொடுமை…கல்லறைகளுக்கு பூட்டு.. #RajNewsTamil #Pakistan

Twitter Link | Archive Link 

மதிப்பீடு

விளக்கம்

பாகிஸ்தானில் பெண் சடலங்களைக் கூட விட்டுவைக்காமல் அதனைத் தோண்டி எடுத்து பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரம் நடந்து வருவதாக கூறிய செய்தி ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களிலும், இந்தியாவின் பல முக்கிய செய்தி ஊடகங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

Archive Link

மேலும் அதில் பாகிஸ்தானில் உள்ள பெற்றோர்கள் தங்கள் மகளின் உடல் பலாத்காரம் செய்யப்படுவதை தவிர்ப்பதற்காகவே கல்லறையை பூட்டி வைக்கின்றனர் என்றுக் குறிப்பிட்டு பச்சை நிற இரும்புக் கம்பிகளை கொண்டு பூட்டப்பட்ட கல்லறையின் புகைப்படம் தொடர்பான செய்திகள் ANI, NDTV, Times Now மற்றும் Times of India உள்ளிட்ட பல முக்கிய ஆங்கில ஊடகங்களாலும், விகடன், ராஜ் நியூஸ், IBC தமிழ்நாடு, செய்தி புனல் போன்ற தமிழ் ஊடகங்களாலும் வெளியிடப்பட்டுள்ளது.

Archive Link

மேலும் ராஜ் நியூஸ் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “2020ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உகாரா எனும் இடத்தில் பெண் பிணத்தை பாலியல் வன்கொடுமை செய்தவர் கையும் களவுமாக பிடிப்பட்டார். 2021ம் ஆண்டு குலாமுல்லா என்னும் ஊருக்கு அருகில் 18 வயது பெண்ணிற்கு இதே கொடுமை நடந்துள்ளது. இதன் காரணமாகவே பெண்களின் கல்லறைகளுக்கு இரும்பு கம்பிகளை கொண்டு கதவமைத்து பூட்டி வைக்கின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளது.

Archive Link:

உண்மை என்ன?

பகிரப்படும் கல்லறையின் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், Delhiite என்ற ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் காணப்பட்டது. அந்தப் பதிவின் மூலம் இந்தக் கல்லறையானது இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள மதன்னாபேட் என்னும் ஊரில் உள்ள தாராப்ஜங் காலனியில் உள்ள கல்லறை என்பதை அறிய முடிந்தது.

3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தன் தாயின் (Zaheda Begum) கல்லறையில் வேறு யாரையும் அடக்கம் செய்துவிடக்கூடாது என்பதற்காகவே முசாபர் அலி என்பவர் பூட்டு போட்டதாக அந்த வீடியோவின் மூலம் அறிய முடிந்தது.

Archive Link:

இது தொடர்பாக மேலும் தேடியதில், சூர்யா ரெட்டி என்ற பத்திரிக்கையாளர் அந்த கல்லறை தொடர்பான சில புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர், “புதைக்குழியில் புதைக்கப்பட்ட 65 வயது பெண், 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மகன் முசாபர் அலி, தவறாக பரவி வரும் தனது தாயின் கல்லறையின் புகைப்படத்தைப் பார்த்து மிகவும் வருத்தமடைந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Archive Link:

வீடியோக்களில் காணப்பட்ட நபர்களைப் பற்றி தேடியதில், வைரலாகும் வீடியோவில் பிங்க் நிற உடையணிந்த நபர் சமூக சேவகர் அப்துல் ஜலீல் என அடையாளம் காண முடிந்தது. அவர் ஆல்ட் நியூஸ்-ன் வேண்டுகோளின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளதை அவரின் முகநூல் பதிவின் மூலம் அறிய முடிந்தது.

மேலும் பூட்டிய கல்லறையின் இருப்பிடத்தை Google Street View மூலம் தேடியதில் கல்லறையின் இருப்பிடத்தை இதன் மூலம் காண முடிந்தது.

இதன் மூலம் இது பாகிஸ்தானில் உள்ள கல்லறை இல்லை என்பதையும், ஹைதராபாத்தில் உள்ள கல்லறையின் புகைப்படம் என்பதை அறியாமலேயே ஆங்கில ஊடகங்களான ANI, Times Now மற்றும் Times of India ஆகியவை தவறாக செய்தி வெளியிட்டுள்ளன என்பதையும் கீழே உள்ள படத்தின் மூலம் அறியலாம்.

மேலும் இது தொடர்பாக தமிழ் செய்தி ஊடகங்கள் தவறாக வெளியிட்ட செய்திகளின் தொகுப்பையும் கீழேக் காணலாம்.

முடிவு :

நம் தேடலில், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவும் பூட்டிய கல்லறை, இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள கல்லறை, இது பாகிஸ்தானின் கல்லறை அல்ல. மேலும் இந்திய செய்தி ஊடகங்களில் சொல்லப்பட்டது போன்று இது பாகிஸ்தானின் நெக்ரோபிலியா வழக்குகளுடன் தொடர்புடையது அல்ல என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni is working as a Sub-Editor in You Turn. She completed her Masters in History from Madras university. She holds her Bachelor’s degree in Engineering and holds a Bachelor’s degree in Tamil Literature. She is the former employee of IT Company. She currently finds the fake news in social media in order to verify the factual accuracy.
Back to top button