This article is from Oct 16, 2019

“பட்டாணிக்கு” பச்சை சாயத்தை பூசும் வைரல் வீடியோ உண்மையா ?

பரவிய செய்தி

இனிமே..பச்சைப் பட்டாணி…கேப்பியா…கேப்பியா!!!!!!????

மதிப்பீடு

விளக்கம்

உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்த அச்சங்கள் மக்கள் மத்தியில் அதிகம் தென்படுகிறது. இருப்பினும் , பலரும் கலப்பட பொருட்களை தான் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக, காய்கறிகளில் கெமிக்கல்கள் குறித்த கேள்விகள் அதிகம். அவற்றில் ஒன்றாக , பட்டாணியில் பச்சை நிற சாயத்தை கலந்து பச்சை பட்டாணியாக மாற்றுவதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Facebook post archived link 

2018-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி Prakash Iyer என்பவரின் முகநூல் கணக்கில் ” இனிமே..பச்சைப் பட்டாணி…கேப்பியா…கேப்பியா ” என்ற வாசகத்துடன் வெளியான வீடியோ 11 லட்சம் பார்வைகளையும் , 62 ஆயிரம் ஷேர்களையும் பெற்று வைரலாகி வருகிறது.

ஓராண்டிற்கு முன்பு பதிவான அந்த பதிவை தற்பொழுது மீண்டும் வைரலாக்கி வருகின்றனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்களின் பார்வையில் கடந்து பரவி வரும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

வைரலாகும் வீடியோ குறித்தும், எங்கு நிகழ்ந்தது என்பது குறித்தும் விரிவான தேடிப் பார்த்தோம். முதலில், ஜூலை 6-ம் தேதி Vtv Gujarati News and Beyond என்ற குஜராத் செய்தி ஊடகத்தின் யூட்யூப் தளத்தில் ” Viral Truth: Yellow peas mixed with colour to make green peas ” என்ற தலைப்பில் வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிட்டு இருந்தனர்.

News video archived link 

அந்த செய்தியில் மஞ்சள் பட்டாணியை சாயம் கலந்து பச்சை நிற பட்டாணியாக மாற்றுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாக முதலில் கூறினர்.

பின்னர் வீடியோவின் 2.37 நிமிடத்தில் ” Fungicidal Coating On wheat Seeds ” என்ற தலைப்பில் வெளியான வீடியோவை காண்பித்து இருந்தனர். அதிலும், இதே வீடியோ பதிவாகி இருந்துள்ளது. அதற்கு அர்த்தம் , ” கோதுமை விதைகளில் பூஞ்சைக்கொல்லி பூச்சு ” என்பதாகும் .

Youtube video archived link  

அந்த தலைப்பினைக் கொண்டு யூட்யூப் தளத்தில் தேடிய பொழுது ” Satpal Singh ” என்பவரின் சேனலில் 2018 ஜூன் 30-ம் தேதி  ” Fungicidal Coating On wheat Seeds ” என்ற தலைப்பில் வெளியான வீடியோ கிடைத்தது. வைரலாவதற்கு முன்பாக பதிவாகி இருக்கிறது .

அதில் , ” பூஞ்சைக்கொல்லி விதை சிகிச்சைகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் நட்பான வழியில் பூஞ்சைக்கொல்லிகளை பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், பயன்படுத்தப்படும் அளவு மிகச் சிறியதாக இருக்கும் . வண்ணத்தை சேர்ப்பது வழக்கமான ஒன்று ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

விதை சிகிச்சை (Seed Treatment ) :

விதை சிகிச்சை என்பது விதை மூலம் பரவும் அல்லது மண்ணால் பரவும் நோய்க்கிருமி உயிரினங்கள் மற்றும் சேமிப்பு பூச்சிகளில் இருந்து விதைகளில் விசக்கிருமிகளை நீக்க பயன்படும்  பூஞ்சைக்கொல்லி , பூச்சிக்கொல்லி அல்லது இரண்டின் கலவையாகும்.

இது தொடர்பான விவரங்கள் ” தமிழ்நாடு வேளாண் தொழில்நுட்ப தளத்தில் ” அளிக்கப்பட்டு இருக்கிறது. மேற்காணும் , வைரல் வீடியோவும் விதைகளுக்கு செய்யப்பட்ட விதை சிகிச்சையாகவே இருக்கும்.

பட்டாணிக்கு பச்சை நிறம் பூசல் :

பட்டாணிக்கு பச்சை நிறம் பூசப்படுவதாக தமிழகத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் வாரச்சந்தையில் விற்பனை செய்த பட்டாணியை ஊற வைத்த போது சாயம் போனதாக  2017 ஆகஸ்ட் மாதம் செய்தி வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம்முடைய தேடலில், மூட்டை மூட்டையாக மஞ்சள் பட்டாணிக்கு பச்சை சாயம் பூசுவதாக வைரலாகும் வீடியோ விதை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என நமக்கு கிடைத்த ஆதாரங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

வீடியோ வைரலாவதற்கு முன்பாக ஜூன் 30-ம் தேதி யூட்யூப் சேனலில் ” கோதுமைப்பயிர்  விதைகளுக்கு பூஞ்சைக்கொல்லி சேர்ப்பதாக ” பதிவாகியதை பார்க்க முடிந்தது.

2018-ல் குஜராத் செய்தி ஊடகத்திலும் வைரலாகும் வீடியோ குறித்து விளக்கமாக செய்தி வெளியிட்டு இருக்கின்றனர்.

பட்டாணிக்கு சாயங்கள் பூசுவதாக செய்திகள் வெளியாகி இருந்தாலும். பச்சை பட்டாணிக்கு சாயம் பூசும் முறை என வைரலாகும் வீடியோ தவறானவையே. அதற்கும் பட்டாணிக்கும் தொடர்பில்லை என்பதே உண்மை. வதந்திகளை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader