பச்சை நிற உருளைக்கிழங்கு விஷமா ?

பரவிய செய்தி
பெரும்பாலானோருக்கு பிடித்த கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்கும் ஒன்று. இதில், விஷமானது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும். உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்து இருக்கும். அப்போது அதனை உட்கொண்டால், உடலின் சக்தியானது கொஞ்சம் கொஞ்சம் குறைந்து கோமா வரை கொண்டு செல்லும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றனர்.
மதிப்பீடு
சுருக்கம்
100g உருளைக்கிழங்கில் 20mg வரை க்ளைக்கோலாய்ட்ஸ் இருக்கலாம். ஆனால் அதை விட அதிகமாக இருக்கும் உருளைக்கிழங்கை குறிப்பிட்ட அளவிற்கு மேல் உண்டால் பக்க விளைவை சந்திக்க வாய்ப்புள்ளது என ஹாங்காங் உணவு பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது.
விளக்கம்
கிழங்கு வகை உணவுகளில் மக்கள் அதிகம் உண்ணக்கூடியவை உருளைக்கிழங்கு. அதிகம் விற்பனை ஆகக் கூடிய உருளைக்கிழங்கை உடலுக்கு நன்மை என உண்ணும் மக்களுக்கு அதில் இருக்கும் பச்சை நிறத்தில் விஷத்தன்மை இருப்பது பற்றி தெரியவில்லை என ஓர் எச்சரிக்கை செய்தி இணையத்தில் வலம் வருகிறது.
உருளைக்கிழங்கில் இயற்கையாகவே க்ளைக்கோ அல்கலாய்டு ( solanum tuberousm) எனும் விஷத்தன்மை இருக்கிறது. மொத்த க்ளைக்கோ அல்கலாய்டில் alpha-solanine மற்றும் alpha-chaconine ஆகிய இவ்விரண்டும் மட்டும் 95 சதவீதத்தை கொண்டுள்ளன.
“ க்ளைக்கோ அல்கலாய்டு உருளைக்கிழங்கு தாவரத்தின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்துள்ளது. அதிகப்படியான க்ளைக்கோ அல்கலாய்டு தாவரத்தின் பூவிலும், முளையிலும் இருக்கும். குறைந்த அளவிலாவை கிழங்கில் இருக்கும். கிழங்கில் இருக்கும் மொத்த க்ளைக்கோ அல்கலாய்டின் அளவு 10-150 mg/kg என மாறுபடும் “.
2007 ஆம் ஆண்டு ஹாங்காங்கின் உணவு பாதுகாப்பு மையத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் ஹாங்காங் சந்தையில் இருந்த உருளைக்கிழங்கில் 26-88 mg/kg க்ளைக்கோ அல்கலாய்டு இருப்பதாக அறிந்துள்ளனர்.
கடைகளில் அல்லது வீடுகளில் வெளிச்சம் அதிகம் உள்ள பகுதிகளில் உருளைக்கிழங்கை நீண்ட நாட்களாக வைத்து இருக்கும் பொழுது அதில் பச்சை நிறத்தில் இருப்பதை காணலாம். உருளைக்கிழங்கில் பச்சை நிறம் மற்றும் க்ளைக்கோ அல்கலாய்டு ஆகிய இரு மாறுதல் அதிகரிக்கிறது. குளோரோபில் அதிகரிப்பதால் தான் பச்சை நிறம் உருவாகிறது. பச்சை நிறம் அதிகரிப்பது க்ளைக்கோ அல்கலாய்டு அளவு அதிகரிப்பதை குறிக்கிறது.
பச்சை உருளைக்கிழங்கு ஆபத்தா :
45 கிலோ எடைக் கொண்டவர்கள் பச்சை நிற முளைகள் இருக்கும் உருளைக்கிழங்கை 500 கிராம் அளவிற்கு எடுத்துக் கொண்டால் உடலுக்கு உபாதைகள் ஏற்படும் என நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலெக்ஸாண்டர் பவ்ளிஸ்டா அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
க்ளைக்கோ அல்கலாய்டு அதிகம் நிறைந்த உருளைக்கிழங்குகளை உண்பதால், வாந்தி, மயக்கம், தலைவலி, காய்ச்சல், ஹைபோதேர்மியா, பல்ஸ் குறைவது, மருட்சி, நரம்பியல் சார்ந்த கோளாறுகள், பார்வையில் மாற்றம், பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படக்கூடும்.
“ தொடர்ந்து மிகவும் அதிக அளவில் பச்சை நிற உருளைக்கிழங்குகளை உட்கொள்வதால் கொஞ்சம் கொஞ்சமாக கோமா நிலைக்கு செல்வர் என்று டென்மார்க்கின் The national food institute -ஐ சேர்ந்த langkilde , stewart என பலர் இணைந்து வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்து உள்ளனர் “
தவிர்க்க வேண்டியவை :
- நீண்ட நாட்களாக வைத்து இருந்த உருளைக்கிழங்குகளை உட்கொள்ள வேண்டாம்.
- உருளைக்கிழங்குகளை குறைந்த ஒளியில் குளிர்ச்சியான உலர்ந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
- பச்சை நிறம், முளைகள் இருக்கும் பகுதிகளை சமைப்பதற்கு முன்பாக நீக்க வேண்டும்.
- க்ளைக்கோ அல்கலாய்டுகள் இருக்கும் கிழங்கை சமைத்தாலும் அதிலேயே இருப்பதால் பச்சை நிற, முளைகள் நிறைந்த கிழங்கை நன்றாக சுத்தப்படுத்தி சமைப்பது நல்லது.
பச்சை நிறம், முளை இருக்கும் உருளைக்கிழங்குகளை அதிகளவில் உண்பது உடலுக்கு நல்லது அல்ல. ஆகையால், அவற்றை தவிர்ப்பது சிறந்தது.