GST 5% ஆக குறைந்தப் பிறகும் விலை குறையவில்லையே.

பரவிய செய்தி
MC Donald’s போன்ற உயர்தர உணவகங்களில், ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைந்தப் பிறகு வாடிக்கையாளர் சாப்பிட்ட உணவிற்காக வழங்கப்பட்ட பில்லில் உள்ள விலையும், வரி குறைப்பிற்கு முன்பு அதே உணவிற்காக வழங்கப்பட்ட பில்லில் உள்ள விலையும் ஒன்றாகத் தான் உள்ளது. வரிகளை குறைத்தும் விலையில் மாற்றம் இல்லை.
மதிப்பீடு
சுருக்கம்
உணவுப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்ட பிறகும், உணவகங்களில் வரியைக் குறைத்து காண்பித்து உணவின் விலையை அதிகரித்து பழைய விலைக்கே விற்பனை செய்து வருகின்றனர்.
விளக்கம்
உணவுப் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரியை 18%-ல் இருந்து 5% ஆக குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் மக்கள் பெரிதும் பயன் அடைவர் என்று கூறினர். இதைத் தொடர்ந்து உணவகங்களில் வரியுடன் கூடிய விலையானது குறையும் என்று எதிர்பார்த்த வேளையில், பல உணவகங்களில் வரி குறைந்தும் உணவின் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளன.
குறிப்பாக, MC Donald’s போன்ற உயர்தர உணவகங்களில் ஜி.எஸ்.டி வரிக் குறைப்பிற்கு பிறகும் உணவின் விலையில் மாற்றம் இல்லாமல், வரிக் குறைப்பிற்கு முன்பு உள்ள விலையிலே விற்பனை செய்வதாகக் கூறி அந்த உணவகத்தில் வழங்கப்பட்ட பில்லை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
அதில், ஆர்டர் செய்த ஒரு உணவின் விலையானது 120 ரூபாயுடன் 18%-ம் வரியை சேர்த்து மொத்தம் 142 ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால், வரி குறைந்த பிறகு அதே உணவை ஆர்டர் செய்து சாப்பிட்ட பிறகு வழங்கப்பட்ட பில்லில் முன்பு இருந்தே 142 என்ற விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரியைக் குறைத்து காண்பித்து உணவின் விலையை அதிகரித்து விற்பனை செய்வது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
இது குறித்து அதன் நிர்வாகம் தனது ட்வீட்டர் பக்கத்தில், மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை 18-ல் இருந்து 5% ஆக குறைத்தது உண்மைதான். ஆனால், உள்ளீட்டு வரி கடனை (ITC) அரசு நீக்கியுள்ளது. எனவே, உணவு தயாரிப்பின் தொகை அதிகரிப்பதால் அதை ஈடுசெய்ய விலையைக் குறைக்கவில்லை என்று பதிவிட்டுள்ளனர்.
இது போன்று பல உணவகங்களில் வரிக் குறைந்த பிறகும் உணவின் விலையை குறைக்காமல் விற்பனை செய்து வருவது மக்களிடையே கோபத்தைத் தூண்டியுள்ளது. ஜி.எஸ்.டி வரிக் குறைந்தும் மக்களுக்கு பயன் ஏதுமில்லை எனவும், சம்பந்தப்பட்ட உணவகங்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.