கூடுவாஞ்சேரி மழை நீரில் முதலை எனப் பரவும் தவறான வீடியோ மற்றும் புகைப்படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தின் பெரும்பலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் குடியிருப்பு மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு அருகே கூடுவாஞ்சேரி பகுதியில் தேங்கிய மழை நீரில் முதலை ஒன்று மிதந்து சென்றதாக வீடியோ ஒன்றும், புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திமுகவுக்கு ஓட்டு போட்டா, வீடு தேடி #முதல்வர் வருவாருன்னு சொன்னாங்க. ! #முதலை வருமுன்னு சொல்லவே இல்லையே😅😅😅
📌 #கூடுவாஞ்சேரி pic.twitter.com/nLqIU4fVtS— DINESHRAJ RAJAGOPAL (@brdineshraj) November 29, 2021
இடைவிடாமல் பெய்து வந்த மழையால் கூடுவாஞ்சேரி சாலையில் மழைநீரில் உலா வந்த முதலை#chennaifloods |#guduvancheey |@Harish_Journo |@Jayachandran_DJ |@gavastk |@rameshibn |@TChemmel |@idhaliyan |@PrakashPandianP |@i_neppo |@Priyan_reports pic.twitter.com/A0fUIOR2b0
— மணிவண்ணன் (@manivannan1825) November 28, 2021
உண்மை என்ன ?
கூடுவாஞ்சேரி பகுதியில் மழை நீரில் முதலை மிதந்து செல்லும் வீடியோ தவறானது என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் கூறுகையில், ” செங்கல்பட்டு மாவட்டம் வல்லாச்சேரி கூட்ரோட்டில் முதலை வந்ததாக தவறான வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. அது முதலை அல்ல, மரக்கட்டை. ஜி.எஸ்.டி சாலையில் தண்ணீர் செல்லும் கால்வாயில் சுழற்சி காரணமாக மரக்கட்டை மிதப்பதை முதலை என வதந்தி பரப்பி இருக்கிறார்கள் ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
இதேபோல், கூடுவாஞ்சேரி குடியிருப்பு பகுதியில் முதலை இருப்பதாக பரவும் புகைப்படம் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தது. சில மாதங்களுக்கு முன்பாகவே தாய்லாந்து வெள்ளத்தில் முதலை நீச்சல் அடிப்பதாக இதே புகைப்படம் இணையத்தில் இடம்பெற்றுள்ளது.
முடிவு :
நம் தேடலில், கூடுவாஞ்சேரி குடியிருப்பு பகுதியில் முதலை வலம் வருவதாக பரவும் வீடியோ மற்றும் புகைப்படம் தவறானது. அது வதந்தி என அறிய முடிகிறது.