10 கோடியில் சாக்கடை திட்டமா? பரவும் பாஜக எம்பியின் பழைய வீடியோ !

பரவிய செய்தி
குஜராத் BJP MP பூனம் பென், தனது தொகுதியில் 10 கோடி செலவில் போடப்பட்ட 10 மீட்டர் சாக்கடை திட்டத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த போது.
மதிப்பீடு
விளக்கம்
குஜராத் மாநிலத்தின் பாஜக எம்பி பூனம்பென் தனது தொகுதியில் 10 கோடி செலவில் அமைக்கப்பட்ட 10 மீட்டர் கழிவுநீர் கால்வாய் திட்டத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த போது எனும் நிலைத்தகவல் உடன் பூனம்பென் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கையில் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளான 1.07 நிமிட வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
திமுக ஆதரவாளர்கள் பலரும் இவ்வீடியோவை முகநூல் குழுக்களில் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். அதேபோல், 10 கோடியில் செலவிடப்பட திட்டம் வீணாய் போவதாக பலரும் விமர்சித்து இவ்வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
உண்மை என்ன ?
10 கோடியில் கழிவுநீர் திட்டத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த போது பாஜக எம்பி பூனம்பென் கால்வாயில் விழுந்ததாக கூறுவதெல்லாம் பொய்யான தகவல். அரசியல் சார்ந்து அதை வேண்டுமென்றே இணைந்திருக்க வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு குஜராத் பாஜக எம்பி பூனம்பென் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ கடந்த சில ஆண்டுகளாவே தவறாக பரப்பப்பட்டு வருகிறது.
2016 மே மாதம் ஜாம்நகரில் உள்ள ஜலாராம் குடிசைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் சட்ட விரோத குடியிருப்புகளை அகற்ற அரசு அதிகாரிகள் மேற்கொண்டு இருந்த இடிக்கும் பணிகளுக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இதையறிந்து, குஜராத்தின் ஜாம்நகர் தொகுதி எம்பி பூனம்பென் மாதம் அங்குள்ள மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொழுது அவர் நின்று கொண்டிருந்த சிமெண்ட் பலகைகள் திடீரென இடிந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். 8 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட இடத்தில் இருந்து விழுந்த காரணத்தினால் பூனம்பென் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த விபத்தில் அவர் அருகில் இருந்தவர்களும் கீழே விழுந்துள்ளனர்.
மேலும் படிக்க : குஜராத்தில் வாய்க்காலில் விழுந்தது மாவட்ட ஆட்சியரா ?| நகைப்பதற்கில்லை.
கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம், குஜராத் கழிவுநீர் கால்வாயில் விழுந்த மாவட்ட ஆட்சியர் என இதே வீடியோவை வைரல் செய்தனர். இது நகைப்பதற்கான விசயம் அல்ல.
முடிவு :
நம் தேடலில், குஜராத் பாஜக எம்பி பூனம்பென் தன் தொகுதியில் 10 கோடி செலவில் அமைக்கப்பட்ட 10 மீட்டர் கழிவுநீர் கால்வாய் திட்டத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த போது விழுந்ததாக பரப்பப்படும் வீடியோ தவறானது மற்றும் பழைய வீடியோ. இந்த பழைய வீடியோவை அரசியல் சார்ந்து பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.