குஜராத் நிலநடுக்கத்திற்கு வெளிநாடுகளின் நிதி உதவியை இந்திய அரசு பெற்றதா ?

பரவிய செய்தி
கேரள மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக UAE வழங்கும் ரூ.700 கோடியை ஏற்க மறுக்கிறது இந்திய அரசு. ஆனால், குஜராத் பூகம்பம் ஏற்பட்ட போது உலக நாடுகள் வழங்கிய நிதியை மட்டும் மோடி அரசு ஏற்றது ஏன் ? அப்பொழுது இல்லாத சட்ட சிக்கல் இப்பொழுது மட்டும் வருகிறதா.
மதிப்பீடு
சுருக்கம்
இந்தியா வெளிநாட்டு அரசாங்கத்திடம் இருந்து நிதி உதவி பெறுவதில்லை என்ற கொள்கையை 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்து உருவாக்கிக் கொண்டது. குஜராத் நிலநடுக்கம் 2001-ல் நிகழ்ந்தது.
விளக்கம்
கேரள மாநிலத்தின் வெள்ள நிவாரண பாதிப்புகளுக்கு உதவ முன்வருவதாகக் கூறி ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் சார்பில் ரூ.700 கோடி நிவாரண உதவி வழங்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். ஆனால், ஐக்கிய அமீர எமிரேட்ஸ் வழங்கும் நிதியை ஏற்பது இயலாத ஒன்றாக இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு காரணம் வெளிநாடுகளின் அரசாங்கம் வழங்கும் நிதியை ஏற்பதில்லை என்று இந்தியா கொண்டுள்ள கொள்கையே என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே மத்திய அரசு தான் குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், மறுசீரமைப்பு பணிக்கும் பிற நாடுகளிடம் இருந்து பல்வேறு விதமான உதவிகளை பெற்றனர். அப்பொழுது சட்ட சிக்கல் ஏதுமில்லையா என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
” 2001 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 12,000 பேர் உயிரிழந்தனர், லட்சக்கணக்கான பேர் காயமடைந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வாழ்வதற்கு கூட வழியில்லாமல் இருந்தனர். அப்பொழுது, பிரதமராக இருந்த மறைந்த திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் வெளிநாடுகள் மூலம் நிதி உதவி பெற்று குஜராத் மாநிலத்தை மறுகட்டமைப்பு செய்ய என முடிவு செய்தார் “.
அதன் விளைவாக 65-க்கும் மேற்பட்ட நாடுகள் குஜராத் நிலநடுக்கத்திற்கு உதவி செய்ய முன்வந்தனர். அதில், அமெரிக்கா 13,100,000 USD, பிரிட்டன் 14,769,000 டாலர், கனடா 50,000 டாலர், சீனா 6,00,000 டாலர், ஜெர்மனி 6,580,000 டாலர் , ஸ்பெயின் 4,106,000 டாலர் வழங்கினர். இன்னும் பல நாடுகள் நிதி உதவியை அளித்தனர். மேலும், மக்களுக்கு தேவையான மருந்துப் பொருட்கள், தற்காலிகமாக தங்க டென்ட்கள், போர்வைகள் என பல உதவிகளை கப்பல்கள் மூலமாகவும், விமானங்கள் மூலமாகவும் அனுப்பி வைத்தனர்.
குஜராத் நிலநடுக்கம் நிகழ்ந்தது 2001 ஆம் ஆண்டில், இந்திய அரசு வெளிநாட்டு அரசுகளிடம் இருந்து நிதி உதவியை பெறுவதில்லை என்று கொள்கை முடிவு ஏற்றுக் கொண்டது 2004 ஆம் ஆண்டில் தான். அதுமட்டுமின்றி, மன்மோகன்சிங் ஆட்சியில் 2004-ல் கொள்கை முடிவை கொண்டு வந்த காரணத்தினால் சுனாமி பாதிப்பிலும் கூட இந்தியா பிற நாடுகளின் நிதியை பெற மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பேரிடர் காலங்களில் ஏற்பட்ட பாதிப்பிற்கு தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை 2016-ன் படி வெளிநாட்டில் இருந்து தாமாக முன்வந்து அளிக்கும் நிதியை ஏற்க வாய்ப்புள்ளதாக மேற்கோள்காட்டி பேசியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன் என்பதும் கவனத்தை ஈர்க்கிறது. இதை மத்திய அரசு தெளிபடுத்தும் இடத்தில் உள்ளது
Related Article:
700 கோடி சர்ச்சையான காரணம் என்ன?