குஜராத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியது பாகிஸ்தான் முஸ்லீம்கள் எனப் போலிச் செய்தியை பதிவிட்டு நீக்கிய இந்து மக்கள் கட்சி !

பரவிய செய்தி
குஜராத்தில் கள்ள சாராயம் அருந்திய 42 பேர் பலி. குஜராத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பாகிஸ்தானை சேர்ந்த 8 பேர் கைது. போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் ஆணை.
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பூரண மதுவிலக்கு உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிர் பலிகள் ஆளும் பாஜக அரசுக்கு பெரும் விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது.
இந்நிலையில், குஜராத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளதாகவும் சன் நியூஸ் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், காவல்துறையைச் சேர்ந்த 6 பேர் பணியிடை நீக்கம் மற்றும் 2 எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என செய்திகளில் ஏதும் குறிப்பிடவில்லை.
மாறாக, ஜூலை 26-ம் தேதி வெளியான நியூஸ் 18 செய்தியில்,” மதுபானம் என்ற பெயரில் 60,000 மதிப்பிலான 200 லிட்டர் மெத்தில்லை ஆர்டர் செய்து விநியோகித்த மெத்தில் வணிகத்துடன் தொடர்புடைய குடோன் மேலாளர் ஜெயேஷ் எனும் ராஜு, அவரது உறவினர் சஞ்சய் மற்றும் பிந்து ஆகிய 3 முக்கிய குற்றவாளிகளின் பெயர்களை போலீசார் வெளியிட்டதாக ” வெளியாகி இருக்கிறது.
ஜூலை 28-ம் தேதி சன் நியூஸ் சேனலில் இவ்வாறான நியூஸ் கார்டு ஏதும் வெளியாகவில்லை. வைரல் செய்யப்படும் சன் நியூஸ் சேனலின் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டு உள்ளது எனத் தெளிவாய் தெரிகிறது.
மேலும், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் உள்ள கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அது ஜூலை 22-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் வார சந்தை நடைபெறும் பொது இடத்தில் தொழுகை செய்ததற்காக 8 பேரை போலீசார் கைது செய்த போது எடுக்கப்பட்ட படம். இதையடுத்து, அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நீதிமன்றம் ஜாமின் வழங்கியதாக jammubulletin எனும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், குஜராத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பாகிஸ்தானை சேர்ந்த 8 பேர் கைது மற்றும் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் ஆணை எனப் பரப்பப்படும் செய்தி போலியானது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பொது இடத்தில் தொழுகை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படத்தை வைத்து போலியான செய்தியை உருவாக்கி உள்ளனர் என அறிய முடிகிறது.