குஜராத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி என மும்பை படத்தை பதிவிட்ட குஜராத் பாஜக !

பரவிய செய்தி

மாநிலத்தின் அதிநவீன உள்கட்டமைப்புக்கான பாரதிய ஜனதா கட்சியின் தீர்மானம்..

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

குஜராத் மாநிலத்தில் 2022 சட்டசபைத் தேர்தலுக்கான முதற் கட்ட வாக்குப்பதிவு இன்று(டிசம்பர் 1) நடைபெற்று வருகிறது. குஜராத்தில் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜக இம்முறையும் ஆட்சியை தக்க வைக்க தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. பிற நாடுகளின் தலைவர்களை குஜராத்திற்கு அழைத்து செல்லும் போது அங்குள்ள குடிசைப் பகுதிகளை வெள்ளை துணிகளை கொண்டு மறைக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதுண்டு.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் அதிநவீன உள்கட்டமைப்புக்கான பாரதிய ஜனதா கட்சியின் தீர்மானம் என மேம்பாலத்தின் அருகே அடிக்குமாடி கட்டிடம் இருக்கும் புகைப்படத்தை குஜராத் பாஜக ட்விட்டரில் பதிவிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.

Archive link 

குஜராத் பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவை, குஜராத் பாஜக எம்பி வினோத் செளதா, தினேஷ் அனவதியா உள்ளிட்டோரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

உண்மை என்ன ?

குஜராத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி என குஜாரத் பாஜக ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்த போது, ” indiafilings ” எனும் இணையதளத்தில் Delhi Mumbai Industrial Corridor எனக் குறிப்பிட்டு இப்புகைப்படம் வெளியான தகவல் கிடைத்தது.

மேற்கொண்டு தேடுகையில், புகைப்பட விற்பனை தளமான alamy இணையதளத்தில் 2014ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சாண்டா க்ரூஸ் செம்பூர் மேம்பாலத்தின் பகுதி எனக் குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளது.

மும்பையில் உள்ள சாண்டா க்ரூஸ் செம்பூர் மேம்பால இணைப்பு சாலையானது கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது. அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.

மேலும் படிக்க : பாஜக தலைவர்கள் பகிர்ந்த நொய்டா விமான நிலைய வீடியோவில் சீனா, தென் கொரியா படங்கள் !

மேலும் படிக்க : யோகி சாதனை எனும் பதிவில் சென்னை மருத்துவமனை புகைப்படம்.. உ.பி மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை என்ன ?

பாஜகவைச் சேர்ந்தவர்கள் பிற மாநில மற்றும் நாடுகளில் உள்ள படங்களை தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலத்துடன் தொடர்புப்படுத்தி பரப்புவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பாக பலமுறை அவ்வாறான பிரச்சாரத்தை பாஜகவினர் செய்துள்ளனர்.

முடிவு : 

நம் தேடலில், குஜராத் மாநிலத்தின் அதிநவீன உள்கட்டமைப்புக்கான பாஜகவின் தீர்மானம் என தேர்தல் பிரச்சாரத்திற்காக குஜராத் பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்தில் உள்ள மேம்பாலம் மும்பையைச் சேர்ந்தது. 2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மும்பையில் திறக்கப்பட்ட பாலத்தின் புகைப்படத்தை குஜராத் பாஜக பயன்படுத்தி உள்ளது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader