குஜராத்தில் பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை சுட்ட பெண் போலீஸ் டிஸ்மிஸ் என வதந்தி !

பரவிய செய்தி
ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி குஜராத்தில் 19 வயது பெண்ணை அடைத்து வைத்து, பாலியல் செய்த 3 பேரை ஆண்குறியிலேயே சுட்டதற்காக இந்த காவலதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இவர் செய்தது தவறுதானே ?
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக இருந்ததால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தகைய ஊரடங்கு காலத்தில் குஜராத் மாநிலத்தில் 19 வயது பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகள் மூன்று பேரின் ஆண்குறியில் சுட்ட பெண் போலீஸ் இவரே, அந்த செயலுக்காக அவரை டிஸ்மிஸ் செய்து இருக்கிறார்கள் என இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதலே பரவத் தொடங்கிய இந்த ஃபார்வர்டு தகவல் தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இப்பதிவில் இடம்பெற்ற போலீஸ் உடையில் இருக்கும் பெண்ணின் புகைப்படமானது, ” 2019-ல் பீகாரில் 8 வயது பள்ளி சிறுமியை கற்பழித்த 3 காமுகர்களின் ஆணுறுப்பில் சுட்டு கொன்று விட்டு தற்போது “மனித உரிமை ஆணையம்” விசாரணைக்கு அமர்ந்திருக்கும் பெண் அதிகாரி ” எனப் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது. அவ்வாறான சம்பவம் ஏதும் நிகழவில்லை, புகைப்படத்தில் இருப்பவர் உண்மையான போலீஸ் அதிகாரியா என்பது குறித்தும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை என நாம் கட்டுரை வெளியிட்டு இருதோம்.
மேலும் படிக்க : பீகாரில் சிறுமியை வன்கொடுமை செய்த கொடூரர்களை சுட்டுக் கொன்ற அதிகாரியா ? | உண்மை என்ன ?
பாலியல் வன்புணர்வு செய்தவர்களை ஆணுறுப்பில் சுட்ட பெண் போலீஸ் என ஃபார்வர்டு செய்தி பரவுவது முதல் முறை அல்ல. சினிமா நடிகைகள் படத்தை வைத்தும் கூட இதே கதையை பரப்பி இருந்தனர்.
மேலும் படிக்க : சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் | செய்தி உண்மையா ?
ஊரடங்கு காலத்தில் குஜராத் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஏதும் நிகழ்ந்ததா என தேடிப் பார்க்கையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தரப்பில் புகார் அளிக்கப்பட்டது மே மாதம் 19-ம் தேதி இந்தியன்எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது. எனினும், இந்த செய்திக்கும் ஃபார்வர்டு தகவலுக்கும் தொடர்பில்லை, ஃபார்வர்டு தகவல் ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் உடையில் இருக்கும் பெண் உண்மையான போலீசா அல்லது நடிகையா என ஓர் முடிவிற்குள் வரமுடியவில்லை. எனினும், ஒரே கதையில் சிறு மாற்றங்களை செய்து வெல்வேறு புகைப்படங்கள் உடன் போலியான செய்திகளை பரப்பி வருகிறார்கள் என தெளிவாய் புரிந்து கொள்ள முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி குஜராத்தில் 19 வயது பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை ஆண்குறியிலேயே சுட்டதற்காக காவல் அதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என பரவும் தகவல் வதந்தியே எனப் புரிந்து கொள்ள முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.