குஜராத் பள்ளித் தேர்வில் 959 மாணவர்கள் ஒரே மாதிரியான பதில்கள் !

பரவிய செய்தி
குஜராத்தில் தேர்வெழுதிய 959 மாணவர்களின் விடைத்தாள்களின் விடைகள் ஒரே மாதிரியாக இருந்துள்ளன.
மதிப்பீடு
விளக்கம்
குஜராத் மாநிலத்தில் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 959 பேர் ஒரே மாதிரியான பதில்களையும், ஒரே மாதிரியான தவறுகளையும் செய்திருந்தது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. சுமார் 1000 மாணவர்கள் மொத்தமாக காப்பி அடித்து எழுதிய விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.
குஜராத் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்த தேர்வுகளில் அதிக அளவில் காப்பி அடித்து இருக்கலாம் என தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, எந்தெந்த தேர்வு மையங்களில் இருந்து புகார்கள் வந்ததோ அங்கு திருத்தப்பட்ட விடைத்தாள்கள் ஆராயப்பட்டன.
அதில், 959-க்கும் மேற்பட்ட 12-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களில், ஒருவர் ஒரு கேள்விக்கு அளித்த இருந்த பதிலையே மற்றொருவரும் அளித்து இருக்கிறார். அதேபோன்று, ஒருவர் செய்த தவறையே மற்றொருவரும் செய்திருக்கிறார் என GSHSEB தகவல்கள் தெரிவிக்கின்றன.
முறைகேடு நடந்த தேர்வு மையங்களில் ஒன்றில், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ” Dikri Ghar Ni Divdi (daughter is earthen lamp of the family) ” என்ற கட்டுரையில் ஆரம்பம் முதல் இறுதி வரையில் ஒரே மாதிரியாக எழுதி உள்ளனர். கணக்கியல், பொருளாதாரம், ஆங்கிலம் உள்ளிட்ட தேர்வுகளில் காப்பி அடித்தல் நடந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
குஜராத் தேர்வு வரலாற்றில் இம்முறை நடந்த சம்பவமே மிகப்பெரிய அளவிலான காப்பி அடித்த சம்பவம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தபட்ட தேர்வு மையங்களில் நடந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குஜராத்தில் உள்ள ஜுனாகத், கிர்-சோம்னாத் ஆகிய மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் இருந்தே மாணவர்கள் காப்பி அடித்த விவகாரத்தில் சிக்கி உள்ளனர். தேர்வு மையங்களில் இருந்த ஆசிரியர்களே மாணவர்களுக்கு விடையை அளித்ததாக சில மாணவர்கள் கமிட்டியிடம் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆயிரங்களில் பணத்தை கொட்டி படிக்க வைக்கும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் துணையுடன் மாணவர்களுக்கு தேர்வுகளில் விடையை அளித்து விடுகிறார்கள். குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம் கல்வியை பணம், மதிப்பெண் ஆக மட்டுமே பார்க்கப்படுகிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.