குஜராத்தில் கணவருக்காக ராணி உதயமதி கட்டிய நினைவிடம் எனப் பரவும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி
ஆண் பெண்ணுக்கு அமைத்த(கட்டிய) தாஜ்மகால் போல்,பெண் ஆணுக்காக எங்காவது நினைவு சின்னம் அமைத்திருக்கிறார்களா…??? என்றால் ஆம் தாஜ்மகாலை விட பிரமாண்டமாக பெண் ஒருத்தி தன் கணவனுக்காக நினைவிடம் அமைத்து இருக்கிறாள்.
குஜராத் மாநிலத்தில் பதான் பகுதியை ஆட்சி செய்து வந்த சோழங்கி பரம்பரையை சேர்ந்த பீம் தேவ். அவன் இறந்த பிறகு, அவனின் நினைவாக ராணி உதயமதி பூமிக்கு அடியில் பல மீட்டர் நீளமான பள்ளம் தோண்டி கிணற்றின் வடிவிலான பிரமாண்டமான நினைவிடம் அமைத்துள்ளார், அறிவியல் விஞ்ஞானம் வளரும் முன்னரே, பல மீட்டர் நீளமான பள்ளத்தில் எப்படி கோவில் கட்டினார், கற் தூண்கள் எல்லாம் எப்படி இறக்கி கட்டப்பட்டது என்பது வியப்பாகவே உள்ளது, இது ராணி கீ வாவ் (Raani ki vav) என்று அழைக்கப்படுகிறது.
ஷாஜகானுக்கு 600 வருடங்களுக்கு முன்னே ஒரு பெண் ஆணுக்காக நினைவிடம் அதுவும் பிரமாண்ட நினைவிடத்தை அமைத்தாள். அதன் காலம் கிபி 1022.
மதிப்பீடு
விளக்கம்
குஜராத் மாநிலத்தின் பதான் பகுதியில் ராணி உதயமதி தனது கணவரின் நினைவாக உருவாக்கிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான நினைவிடம் எனக் கூறி இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
*ஆண் பெண்ணுக்கு அமைத்த(கட்டிய) தாஜ்மகால் போல் பெண் ஆணுக்காக எங்காவது நினைவு சின்னம் அமைத்திருக்கிறார்களா…???*
என்றால்
ஆம் தாஜ்மகாலை விட பிரமாண்டமாக பெண் ஒருத்தி தன் கணவனுக்காக நினைவிடம் அமைத்து இருக்கிறாள். pic.twitter.com/nI8Rgq46QS
— #பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳 (@Kaalabala1) March 21, 2023
வைரல் செய்யப்படும் பதிவானது கடந்த 2020ம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்துள்ளதை பார்க்க முடிந்தது.
உண்மை என்ன ?
வைரல் பதிவில் உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், Atithicabs எனும் இணையதளத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் ரணக்பூர் கிராமத்தில் உள்ள ரணக்பூர் சமணக் கோவில் குறித்த கட்டுரையில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
2021 மே 16ம் தேதி ராஜஸ்தான் சுற்றுலா யூடியூப் சேனலில் வெளியான ரணக்பூர் சமணக் கோவில் பற்றிய வீடியோவில், தூண்களுக்கு நடுவே இருக்கும் யானையின் சிலை இடம்பெற்று இருப்பதைக் காணலாம்.
ராணி கி வாவ் :
ராணி கி வாவ் (ராணியின் கிணறு) என அழைக்கப்படும் கிணறு வடிவ அமைப்பை 1063-ம் ஆண்டில் ராணி உதயமதி என்பவர் தன் கணவர் பீம்தேவ் நினைவாக கட்டியுள்ளார். குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தின் சரஸ்வதி நதிக்கரையில் அமைக்கப்பட்டு இருக்கும் இக்கிணறு வடிவ அமைப்பு வெள்ளத்தில் மூழ்கியதாகவும், 1980-ல் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி குழுவால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட போது அழகிய வேலைப்பாடுகள் உடன் காணப்பட்டதாக குஜராத் சுற்றுலா இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பு ” ராணி கி வாவ் ” அமைப்பை உலகப் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவித்தது. இந்தியாவில் புதிதாக புழக்கத்தில் விடப்பட்ட 100 ரூபாய் நோட்டின் பின்பக்கத்தில் ராணி கி வாவ் அமைப்பு அச்சிடப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க : ராஜராஜச் சோழன் கட்டிய கிணறு வடிவ அரண்மனையா ?| ஃபேஸ்புக் உளறல்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக, ராணி கி வாவ் உடைய புகைப்படங்களை ராஜராஜ சோழன் தன் மனைவிக்காக கட்டிய கிணறு வடிவிலான அரண்மனை எனக் கூறி தவறாக தகவல்கள் பரப்பப்பட்டன. அதுகுறித்தும் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
முடிவு :
நம் தேடலில், குஜராத் மாநிலத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள ராணி கி வாவ் எனும் கிணறு வடிவிலான அமைப்பு 11ம் நூற்றாண்டில் ராணி உதயமதியால் தன் கணவருக்காக கட்டப்பட்டதாகக் கூறும் தகவல் உண்மையே.
ஆனால், அதனுடன் இணைக்கப்பட்ட புகைப்படத்தில் உள்ள அமைப்பு ராணி கி வாவ் அல்ல, அது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரணக்பூர் சமணக் கோவிலின் புகைப்படம் என்பதை அறிய முடிகிறது.