ஹெச்.ராஜா மனநலம் பாதிக்கப்பட்டதாக மனு: காவல்துறையிடம் விளக்க கேட்ட நீதிமன்றம்.

பரவிய செய்தி
பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை மனநலப் பரிசோதனைக்கு அனுப்புமாறு தொடரப்பட்ட வழக்கில் காவல்துறை விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
சுருக்கம்
ஹெச்.ராஜாவின் செயல்பாடு தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதால், அவரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விளக்கம்
சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியை பற்றி தமிழ்நாட்டில் பெரும்பாலும் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தற்போது தமிழக பாஜக கட்சியை பற்றி அறியாதவர்கள் எவருமில்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு பிரபலமாகி உள்ளனர். பிரபலமாகினர் என்று கூறுவதை விட பிரபலப்படுத்திக் கொண்டனர் என்றே கூற வேண்டும்.
இதில், பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சர்ச்சைக்கு பெயர் போனவர். “ வேட்டியை மடிச்சு கட்டுனா ராஜா கூட ரவுடி தான் ” என்று பொது மேடையில் அவர் பேசிய வார்த்தைகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் மீம் கிரியேட்டர்ஸ் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆண்டாள் பற்றி வைரமுத்து அவர்கள் கூறிய சர்ச்சையான விளக்கக் கட்டுரை விவகாரத்தில், வைரமுத்துவின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் ஹெச்.ராஜா. அதேபோன்று திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்ட போது, “ இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை ” என்று ஹெச்.ராஜாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது. அது வன்முறையை தூண்டும் விதத்தில் அமைந்தது.
இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கிடையில், பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரியாரின் சிலையை சேதப்படுத்தினர். வன்முறை உருவாகும் அளவிற்கு சூழ்நிலை சென்றால், நான் அவ்வாறு எந்த கருத்தும் கூறவில்லை. அட்மின் என்னை கேட்காமல் பதிவிட்டார் என்று கூறி பிரச்சனையில் இருந்து பின் வாங்கினார் ஹெச்.ராஜா.
இந்நிலையில்தான், திருவேற்காட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர், தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டும் விதத்தில் ஹெச்.ராஜாவின் செயல்பாடுகள் இருப்பதாகவும், பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் பேசி வருகிறார். எனவே, அவரை கைது செய்து மனநல பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறி மார்ச் 7-ம் தேதி சென்னை காவல் ஆணையர் மற்றும் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஹெச்.ராஜாவிற்கு எதிராக அளித்த புகாரின் மீது காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறைக்கு எதிராக வழக்கு தொடுத்தார் தமிழ்வேந்தன்.
அதில், தனது புகாரின் மீது காவல்துறை இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், “ ஹெச்.ராஜாவிற்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என அளிக்கப்பட்ட புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்றும், அது தொடர்பாககாவல்துறை விளக்கமளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், வழக்கின் விசாரணையை 28-ம் தேதி ஒத்தி வைத்தார்.
ஹெச்.ராஜா தொடர்புடைய வழக்கில் உயர் நீதிமன்றத்தின் இந்த கேள்வி சமூக வலைத்தளங்களில் மீம்களாக வைரலாகி வருகிறது.