This article is from Sep 30, 2018

வறுமை..!! மண்ணை உண்ணும் ஹைதி தேச மக்கள்.

பரவிய செய்தி

Haiti என்ற நாட்டில் பஞ்சம் பட்டினியால் மக்கள் உண்பதற்கு உணவு இல்லை. ஆகவே, மண்ணை எடுத்து ரொட்டி துண்டுகளாக செய்து சாப்பிடும் காட்சி. உணவை வீணாக்காதீர்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

லத்தீன் அமெரிக்க நாடான ஹைதியில் பொருளாதாரம் சீர்குலைந்ததால் மக்களின் அடிப்படை தேவையான உணவைக் கூட குறைந்த விலையில் அளிக்கும் நிலையில் அந்நாடு இல்லை. மண்ணை கொண்டு தயாரிக்கப்படும் ரொட்டி துண்டுகளை உண்கின்றனர். வறுமை மட்டுமில்லாமால் அதை பாரம்பரியமாகவும் மருத்துவ நலன் கொண்டது எனவும் நம்பி சாப்பிட்டு வருகிறார்கள்

விளக்கம்

இஸ்பேனியாவில் உள்ள கரீபியன் தீவில் அமைந்துள்ளது ஹைதி. லத்தீன் அமெரிக்க நாடான ஹைதியில் ஆப்ரிக்கா நாட்டை பூர்வீகமாக கொண்டவர் 95% பேர், மீதமுள்ளவர்கள் ஐரோப்பிய, அரபு தேசங்களை சேர்ந்தவர்கள். இங்கு சுமார் 1 கோடிக்கு நிகரான மக்கள் தொகையே காணப்படுகிறது.

1804 ஆம் ஆண்டில் அடிமைத்தனத்திற்கு எதிராக போராடி சுதந்திரத்தை பெற்ற முதல் லத்தின் அமெரிக்க நாடு என்பது குறிப்பிடத்தக்கது. பிரெஞ்ச் நாட்டின் அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு 200 ஆண்டுகளை கடந்த தேசம் இன்றும் ஊழலாலும், பொருளாதார சீரழிவாலும் மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.

உண்ண உணவு இல்லை..!! சாமானிய மக்களால் அடிப்படை தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கூட வழியில்லா நிலை. மறுபுறம் வசதிப்படைத்தவர்கள் சுகமான வாழ்வு. இதற்கு காரணம் என்ன ? நிலையற்ற அரசியல், வறுமையால் உருவான வன்முறைகள், ஊழல் என பல நிலைகளில் ஹைதி நாடு சிக்கி சீர்குலைந்து உள்ளது. 2010 ஆம் ஆண்டில் உருவான மிகப்பெரிய நிலநடுக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறது.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள நாடுகளின் பட்டியலில் உள்ள ஹைதி தேசத்தை உலக நாடுகள் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு “ உணவாக மண் ரொட்டிகளை “ உண்பது. ஆம், அதிக விலை உணவுப் பொருட்களை விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு அங்கு இருக்கும் மக்களுக்கு வருமானம் இல்லை. உணவுப்பொருட்களின் விலையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஹைதியில் ஒருவரின் ஒருநாள் வருமானம் என்பது 1 டாலர் முதல் 2 டாலர் மட்டுமே..!! அதை வைத்துக் கொண்டு ஒரு குடும்பத்திற்கே உணவு என்பது சாத்தியமில்லா ஒன்று. இதன் விளைவு மக்கள் மண் சார்ந்த உணவுகளை உண்ணும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர். பார்ப்பதற்கு படங்களில் காண்பிக்கும் சாக்லேட்டை போன்ற நிறத்தில் காணப்படுபவை மண்ணை மூலப் பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்.

“ Bon Bon terres என்னும் உணவானது உப்பு, காய்கறி எண்ணெய் மற்றும் சுத்தப்படுத்தப்பட்ட மண் கொண்டு தயாரிக்கப்படுகிறது “

மண்ணை அப்படியே உண்ண முடியாது. மண்ணை சுத்தப்படுத்தி, எண்ணெய் , மாவு போன்ற சில பொருட்களை கலந்து மண் ரொட்டித் துண்டுகள் தயாரிக்கப்படுகிறது.. ஹைதி நாட்டில் பெருவாரியான மக்களின் உணவாக இவை மாறி வருகிறது. வறுமை ஒரு காரணமாக இருந்தாலும் மக்கள் இதை பாரம்பரியமான உணவாக நினைக்கின்றனர். இதில் பயன்படுத்தப்படும் சிறப்பு மண்ணில் ஊட்டச்சத்து இருப்பதாக நம்புகின்றனர்.

 

உலகில் 700 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைப்பாடுகளை கொண்டுள்ளனர். மற்ற உணவுகளையும் இவர்கள் உண்ணும் போதிலும் சரியான உணவை உண்பவர்களுக்கே ஊட்டச்சத்து குறைப்பாடு உருவாகும் நிலையில், மண்ணை உண்பவர்களின் நிலை…!!

” வளர்ந்த நாடுகளில் உள்ள நுகர்வோர்கள் ஒவ்வொரு ஆண்டும் 222 மில்லியன் டன் உணவுகளை வீணடிக்கிறார்கள்… துணை சஹாரன் ஆப்பிரிக்காவின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தி 230 மில்லியன் டன்.. உலகில் உற்பத்தியாகும் உணவுகளில் மூன்றில் ஒரு பங்கு உணவு 1.3 பில்லியன் டன் அளவிற்கு பயன்படுத்த முடியாமல் அல்லது வீணாக்கப்படுகிறது ”

ஒரு தரப்பு மக்கள் உணவை அலட்சியப்படுத்தி வருகிறார்கள், மறுபுறம் மண்ணை உண்கின்றனர் என்பதை உணர்தல் வேண்டும்.

“ உணவை வீணாக்காதீர்கள் “

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader