பாபர் மசூதிக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் அனுமன் சிலை கிடைத்ததா ?

பரவிய செய்தி
பாபர் மசூதிக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலைத்தை தோண்டிய பொது நிலத்தில் ஹனுமன் சிலை காணப்பட்டது . அயோத்தி இராமனின் நிலம் என்பதை இது காட்டுகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை அன்றோ.
மதிப்பீடு
விளக்கம்
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்ட போது பாபர் மசூதியை வேறு இடத்தில் கட்ட அயோத்தியில் 5 ஏக்கர் நிலப்பரப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பாபர் மசூதி கட்ட வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை தோண்டிய பொழுது இந்து கடவுள் அனுமன் சிலை கிடைத்ததாக புகைப்படங்கள் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
While digging five acres of land allotted to Babri masjid they found Lord Hanuman’s idol in the land. It shows Ayodhya is land of Lord Ram pic.twitter.com/uiXFXXz1Dx
— இந்துசேனை (@HinduSenai) December 9, 2019
இதே படங்கள் இந்திய அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தற்பொழுது தமிழிலும் பரவி வருவதால், இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிட தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
நிலத்தில் இருந்து கிடைத்த அனுமன் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், 2019 ஜூலை-யில் Patrika என்ற இந்தி மொழி இணையதளத்தில் ” மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் பகுதியில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள பார்கேதி அப்துல்லா கிராமத்தில் பயிரிட நிலத்தை தோண்டிய பொழுது அனுமனின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது ” என செய்தி வெளியிட்டு உள்ளனர்.
இதேபோல், ஜூலை 12-ம் தேதி uploaderleaks என்ற இணையதளத்திலும் போபால் பகுதியில் அனுமனின் சிலை கிடைத்ததாக புகைபடத்துடன் இந்தியில் செய்தியில் வெளியிட்டு உள்ளனர். இரண்டும் ஒரே சிலையே !
Patrika செய்தியில், நிலத்தில் அனுமனின் சிலை கிடைத்ததையடுத்து, பரவிய செய்தியால் மக்கள் கூட்டம் அப்பகுதிக்கு வந்து வழிபாடுகள் செய்யத் துவங்கினர். இதையடுத்து, அப்பகுதியின் நிர்வாகிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். மேலும், நிலத்தில் கிடைத்த சிலை புதியதா அல்லது பழங்கால சிலை தானா என்பது குறித்த விசாரணையும் தொடங்கி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது 2019 நவம்பர் 9-ம் தேதி , அனுமனின் சிலை கிடைத்தது ஜூலை 2019 மற்றும் கண்டெடுக்கப்பட்ட இடம் அயோத்தி இல்லை, மத்தியப் பிரதேசம்.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவதற்கு வழங்கப்பட 5 ஏக்கர் நிலத்தில் அனுமனின் சிலை கிடைத்ததாக பகிரப்படும் செய்தி தவறானவை. அயோத்தி தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் கிடைத்த சிலையை அயோத்தியில் கிடைத்ததாக வதந்தியை பரப்பி வருகின்றனர்.