ஹரியானாவில் பணத்திற்காக குழந்தையை ஆழ்துளை கிணற்றில் தள்ளியதாக வதந்தி !

பரவிய செய்தி
சுர்ஜித் தந்தையை போல தானும் பணக்காரனாக வேண்டும் என்று மகளைக் கொன்ற அப்பா ? சுர்ஜித் தந்தைக்கு பணம் கொடுத்தது தவறான எடுத்துக்காட்டாக மாறி இன்று ஒரு சிறுமியின் உயிரை பழிவாங்கியுள்ளது . இனியாவது திருந்துவார்களா ?
மதிப்பீடு
விளக்கம்
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுபள்ளி என்ற கிராமத்தில் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் நிகழ்ந்த சில நாட்களில் ஹரியானாவில் 5 வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் பெண் குழந்தை தவறி விழவில்லை, பணத்திற்கு ஆசைப்பட்டு குழந்தையின் தந்தையே ஆழ்துளை கிணற்றில் தள்ளி விட்டதாக யூட்யூப் சேனலில் வெளியான வீடியோவை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கியுள்ளனர்.
Let’s look Around என்ற யூட்யூப் சேனலில் ” சுர்ஜித் தந்தையை போல தானும் பணக்காரனாக வேண்டும் என்று மகளை கொன்ற அப்பா ?” என்ற தலைப்பில் வெளியான வீடியோவில், ” ஹரியானா மாநிலத்தில் ஷிவானி என்ற 5 வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தலைகீழாக விழுந்து இறந்து உள்ளது. குழந்தையின் தந்தையே பணத்திற்காக குழந்தையை ஆழ்துளை கிணற்றில் தள்ளி விட்டதாக போலீஸ் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளதாக ” ஆடியோ பதிவாக இடம்பெற்று இருக்கிறது.
இதன் உண்மைத்தன்மையை அறிந்து விரைவாக பதிவிடுமாறு ஃபாலோயர் தரப்பில் யூடர்ன் தரப்பிடம் கேட்கப்பட்டது.
உண்மை என்ன ?
ஹரியானா மாநிலத்தின் கர்னல் மாவட்டத்தில் ஹர்சிங்ப்புரா என்ற கிராமத்தில் 5 வயது பெண் குழந்தை விழுந்து 50 அடி ஆழம் வரையில் சென்று சிக்கிக் கொண்டது. வீட்டை விட்டு விளையாடச் சென்ற குழந்தை காணவில்லை என அறிந்த குடும்பத்தினர், குழந்தையை தேட ஆரம்பித்த பொழுது ஆழ்துளை கிணற்றில் விழுந்து உள்ளதை அறிந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் பின்னர், காவல் அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை தொடங்கினார்கள். குழந்தைகாக ஆழ்துளை கிணற்றுக்குள் ஒரு குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. கேமரா மூலம் குழந்தையின் நிலை குறித்து கண்காணித்த பொழுது குழந்தை தலைகீழாக இருப்பதை அறிந்து உள்ளனர். 18 மணி நேர மீட்பு பணிகளுக்கு பிறகு குழந்தையை ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் சிறுமி விழுந்து இறந்தது குறித்து வெளியான செய்திகள் அனைத்திலும் மேற்காணும் தகவல்களே இடம்பெற்று வருகின்றன. நவம்பர் 4-ம் தேதி வெளியான முதன்மை செய்தி ஊடகங்கள் இவ்வாறே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
யூட்யூப் சேனலில் வெளியான வீடியோவில் குறிப்பிடுவது போன்று தந்தையே குழந்தையை ஆழ்துளை கிணற்றில் தள்ளி விட்டதை போலீஸ் விசாரணையில் ஒப்புக் கொண்டதாக இருந்தால் நாடு முழுவதிலும் செய்தி ஊடகங்களில் முதன்மை செய்தியாக வெளியாகி இருக்கும். மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் அப்படி எந்தவொரு தகவலும் இல்லை.
குழந்தை சுஜித் இறந்த சம்பவத்திற்கு குழந்தையின் பெற்றோருக்கு கட்சிகள் , அரசு தரப்பில் பணம் கொடுத்ததை தவறாக சித்தரித்து இதுபோன்ற பதிவுகள் ஏராளமாக சமூக வலைதளங்களில் பரப்பி இருந்தனர் என்பதை அறிந்து இருப்போம். அதன் தொடர்ச்சியாக, ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்த ஷிவானியின் மரணத்தையும் தவறான செய்தியாக பரப்பி வருகின்றனர்.
முடிவு :
நம்முடைய தேடலில், ” சுஜித் தந்தையை போன்று தானும் பணக்காரனாக வேண்டுமென ஹரியானாவில் தந்தையே குழந்தையை ஆழ்துளை கிணற்றில் தள்ளியதாக ” பகிரப்படும் வீடியோவில் கூறுவது முற்றிலும் தவறான பதிவு என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.
மேலும், யூட்யூப் சேனலில் காண்பிக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் யாருடையது என்பது குறித்த விவரங்களும் கிடைக்கவில்லை.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.