ஹரியானாவில் சாக்கடை நீரில் பிரியாணி தயாரித்து விற்பனை செய்ததாக வதந்தி பரப்பிய மாலைமலர் !

பரவிய செய்தி
சாக்கடை நீரில் தயாரிக்கப்பட்ட பிரியாணி விற்பனை..! – மாலை மலர்
மதிப்பீடு
விளக்கம்
கடந்த ஆகஸ்ட் 17 அன்று மாலை மலர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமான “மாலை மலர் நியூஸ் தமிழ் “யில் ‘சாக்கடை நீரில் தயாரிக்கப்பட்ட பிரியாணி விற்பனை’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை மாலை மலர் தவிர, வலதுசாரிகள் பலரும் தங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
மேலும் அந்த வீடியோவில், முஸ்லீம் நபர் ஒருவர் அந்த கடையில் நுழைந்த சிலரிடம் மன்னிப்பு கேட்பது போலவும், மோட்டார் உதவியுடன் கடையிலிருந்து கழிவுநீரானது வெளியேற்றப்படுவது போலவும் வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Haryana: Shama Biryani, Railway underpass, Kalka road, pinjore – caught on camera selling Biryani made from gutter water. pic.twitter.com/NwZflqlNmb
— Megh Updates 🚨™ (@MeghUpdates) August 17, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது ஹரியானா மாநிலத்தின் பஞ்ச்குலாவில் உள்ள பிஞ்சோர் பகுதியில் அமைந்துள்ள பிரியாணி கடை என்பதையும், இந்த கடையின் பெயர் ‘ஷாமா பிரியாணி‘ என்பதையும் அறிய முடிந்தது.
இந்த வீடியோ குறித்து ஆகஸ்ட் 16ம் தேதி Kalka Pinjore Live என்ற ஊடகம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் “தாபா கடை அசுத்தமாக இருப்பதாக பிஞ்சோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இன்று (ஆகஸ்ட் 16) ஷாமா தாபாவின் உரிமையாளரான சுவான் அலி, இதற்கு எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டதுடன், இனி வருங்காலத்தில் ஹோட்டல் கழிவுகளை வெளியே விடமாட்டேன் என்றும் உறுதியளித்தார்.
இதுகுறித்து பஜ்ரங் தள் கல்கா தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹர்மீத் சிங் திம்மி கூறுகையில், இந்த அசைவ உணவு கடையில் நீண்ட நாட்களாக அசுத்தமும், துர்நாற்றமும் வீசுகிறது. இதற்கு முன்பும் இதை நாங்கள் தெரிவித்தோம், ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை, அதற்கு பதிலாக எனக்கு ரூ.5000 லஞ்சம் கொடுக்க முயன்றார், பின்னர் நாங்கள் பிஞ்சூர் போலீசில் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தோம்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் எந்த இடத்திலும், அந்த கடையில் சாக்கடை நீரில் பிரியாணி தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.
மேலும் கடையின் முன்புறம் தரையில் கட்டப்பட்டுள்ள தொட்டியில் தேங்கிய அழுக்கு நீரை மோட்டார் பம்ப் மூலம் சாலையில் கொட்டியுள்ளனர். இதை வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட மேற்காணும் புகைப்படங்களில் தெளிவாக காணலாம். அப்போது வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பினர் சிலர், கடையின் உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்தபோது சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்பதை, Kalka Pinjore Live என்ற ஊடகம் வெளியிட்டுள்ள வீடியோவின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
இது குறித்து பிஞ்சோர் காவல் நிலைய ஆய்வாளரான கரம் வீர் சிங்கை யூடர்ன் தரப்பிலிருந்து தொடர்பு கொண்டு பேசுகையில், “சமூக ஊடகங்களில் சாக்கடை நீரில் பிரியாணி செய்ததாகப் பரவி வரும் தகவல்கள் தவறானவை. அந்த கடையின் தண்ணீர் தான் சாக்கடையில் கலக்கிறது. அவர்கள் அந்த தண்ணீரைப் பிரியாணி செய்ய பயன்படுத்துவதில்லை” என்று உறுதிப்படுத்தினார்.
மேலும் இது தொடர்பாக கடையின் உரிமையாளரான சுவான் அலியையும் யூடர்ன் தரப்பிலிருந்து தொடர்பு கொண்டு வருகிறோம். பதில் கிடைத்ததும் அந்த தகவல்களும் இந்த கட்டுரையுடன் இணைக்கப்படும்.
மேலும் படிக்க: முஸ்லீம் கடை பிரியாணியில் கருத்தடை மாத்திரைகளா ? – மருத்துவர் கூறும் தகவல்.
இதற்கு முன்பும் வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக இஸ்லாமியர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் வலதுசாரிகளால் பல வதந்திகள் பரப்பப்பட்டன. அதன் உண்மைத் தன்மைகளை ஆய்வு செய்தும் நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: இஸ்லாமியர் ஒருவர் சிறுநீர் பயன்படுத்தி பாப்கார்ன் தயாரித்ததாகப் பரவும் பொய் செய்தி !
மேலும் படிக்க: லூபோ நிறுவனம் குழந்தைகள் சாப்பிடும் கேக்கில் மாத்திரை வைத்து விற்பனை செய்வதாகப் பரவும் மத வதந்தி!
முடிவு:
நம் தேடலில், ஹரியானாவில் சாக்கடை நீரில் தயாரிக்கப்பட்ட பிரியாணி விற்பனை செய்யப்பட்டதாக மாலை மலர் வெளியிட்டுள்ள செய்தி பொய்யானவை. அந்த கடையின் சாக்கடை நீரை மோட்டார் பம்ப் மூலம் சாலையில் வெளியேற்றியதால், அந்த கடை உரிமையாளருடன் பஜ்ரங் தள் அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ தான் இது என்பதையும் அறிய முடிகிறது.