ஹரியானா கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை எனப் பரவும் பொய் !

பரவிய செய்தி
போலீசார் முன்னிலையில் பஜ்ரங்தல் அமைப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வன்முறையில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற செய்தி பொய்யானது.
மதிப்பீடு
விளக்கம்
ஹரியானா மாநிலம் மேவாத் மாவட்டத்தில் உள்ள நூஹ் பகுதியில் திங்கட்கிழமை விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய பேரணியில் பசு பாதுகாவலராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மோனு மானேசர் என்பவர் கலந்து கொள்ள இருப்பதாகத் தகவல்கள் பரவியது.
இவர் இஸ்லாமிய இளைஞர்களான நசீர் மற்றும் ஜுனைட் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியாவார். இப்பேரணியில் மோனு கலந்து கொள்வதற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் விளைவாகவே பேரணி கலவரமாக மாறியது எனக் கூறப்படுகிறது. கலவரத்தில் இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கலவரத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. அதில், ‘ஹரியானா : போலீசார் முன்னிலையில் பஜ்ரங்தல் அமைப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வன்முறையில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது’ எனக் குறிப்பிட்டனர்.
Plz report this fake news https://t.co/OR0HSTMPAR
— Devi Uvacha|உவாச| उवाच 🇮🇳 (@Devi_Uvacha) August 3, 2023
ஆனால், அந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுபவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை. அவர் ஒரு காவல் அதிகாரி என ஜீ நியூஸ் இந்தி உட்பட சமூக வலைதளங்களில் பலரும் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
ஹரியானா மாநிலத்தில் நிகழ்ந்த கலவரத்தின் போது துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் குறித்து இணையத்தில் தேடுகையில், அவர் காவல்துறை அதிகாரி அல்ல, பசு பாதுகாவலர் என அழைத்துக் கொள்ளும் அசோக் பாபா எனத் தெரிய வந்தது. அவர் மோனு மானேசர் உடன் இருக்கும் புகைப்படமும் இந்திய நியூஸ் எனும் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
‘இந்தியா டிவி’ நூஹ் கலவரம் தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், 3வது நிமிடம் 20வது வினாடியில் துப்பாக்கிச்சூடு பற்றி தற்போது பரவக் கூடிய வீடியோ இடம்பெற்றுள்ளது.
வெளியான வீடியோ மற்றும் துப்பாக்கிக்சூடு பற்றி வழக்கறிஞரான அசோக் பாபா என்பவரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்புகிறார். (அவர்கள் இந்தியில் பேசியதை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம்.) ‘அந்த துப்பாக்கி என்னுடையதுதான். நான் நிறையக் குற்றவாளிகளைப் பிடித்ததினால் அரசு எனக்குத் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி (License) வழங்கியது.
வீடியோவில் பார்க்கும் கோயிலின் உள்ளே குழந்தைகள் மற்றும் பெண்களை நாங்கள் பாதுகாத்து வைத்திருந்தோம். ஐ.ஜி. மம்தா சிங்கும் 10, 30 போலீசுடன் அங்கு வந்தார். அவர்கள் அங்கு வந்ததும் 4 பக்கம் இருந்தும் எங்களைத் தாக்கத் தொடங்கினர். அங்கு இருப்பவர்களைப் பாதுகாக்க வானத்தை நோக்கி நான் சுட்டேன்’ எனக் கூறுகிறார்.
மேற்கொண்டு அந்த மலையின் மீது நீங்கள் என்ன பார்த்தீர்கள்? அங்கு எத்தனை பேர் இருந்தார்கள் எனச் செய்தியாளர் கேள்வி எழுப்புகிறார். ‘நாங்கள் இருந்த இடத்திலிருந்து பார்க்கும் போது மக்கள் சிறிது சிறிதாகத் தெரிந்தனர். சுடும் சத்தம் கேட்டது. சுமார் 200 முதல் 250 பேர் வரையில் இருந்திருக்க கூடும். உறுதியாகத் தெரியவில்லை. அவர்கள் கற்களையும் நெருப்பு பந்துகளையும் வீசி எறிந்தார்கள். நான் வானத்தை நோக்கிச் சுடவில்லை என்றால் அங்கிருந்த பெண்களைக் காப்பாற்றி இருக்க முடியாது’ எனப் பதிலளித்துள்ளார்.
மேலும் பேரணியில் எதற்காக துப்பாக்கியுடன் கலந்து கொண்டீர்கள் என்ற கேள்விக்கு, ‘எனது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கி வைத்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. முதலில் நான் துப்பாக்கியுடன் கோயிலுக்குள் செல்லவில்லை. எனது வாகனத்தில் வைத்து விட்டுத்தான் சென்றேன். எல்லா பக்கமும் எங்களைச் சுற்றி வளைத்த போதுதான் துப்பாக்கியை எடுத்தேன்’ எனக் கூறியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு பற்றிய வீடியோ தொடர்பாகச் செய்தி வெளியிட்டுள்ள வலதுசாரி ஊடகமான ‘Opindia’ தளத்திலும் அசோக் பாபா விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றிலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் வலதுசாரி இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகிறது. ஆனால், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் காவல் துறை என்றும் அவர் சாதாரண உடையில் உள்ளார் என்றும் தவறான தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
முடிவு :
நம் தேடலில், ஹரியானா கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை எனப் பரவும் தகவல் உண்மை அல்ல. அந்த வீடியோவில் இருப்பது நான் தான் என்று அசோக் பாபா என்பவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதையும் அறிய முடிகிறது. vhp