This article is from Feb 13, 2019

ஹரியானாவில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்து நீக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

ஹரியானா மாநிலத்தின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக 2010 வரையில் தமிழ் மொழி இருந்தது என்ற செய்தியை யாரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. 2010-ல் தமிழுக்கு பதிலாக பஞ்சாபி மொழி மாற்றப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

2004-ல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தங்களின் படி பஞ்சாபி மொழி இரண்டாம் மொழி என The Haryana official language act 2004-ல் இடம்பெற்றுள்ளது. 2010-ல் பஞ்சாபி மொழி மாநிலத்தின் இரண்டாம் அதிகாரப்பூர்வ மொழி என அறிவிக்கப்பட்டது.

ஹரியானாவில் தமிழ் மொழி அதிகாரப்பூர்வ இரண்டாம் மொழியாக இருந்தற்கான குறிப்புகளோ அல்லது ஹரியானா சட்டத் திருத்ததிலோ (Act 1969) எங்கும் குறிப்பிடவில்லை.

விளக்கம்

2019 ஜனவரில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்பட செய்தார். நீண்ட நேரம் தமிழில் பேசிய முதல்வரின் பேச்சு ஊடகங்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் வரவேற்பை பெற்றது.

தமிழ் & தெலுங்கு :

ஹரியானா மாநிலத்திற்கும் தமிழ் மொழிக்கும் இடையேயான உறவு பற்றி ஓர் செய்தி பரவத் துவங்கியது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியானா மாநிலம் பிரிந்த பொழுது பஞ்சாபி மொழியை தவிர்க்க தென்னிந்திய மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை 1969-ல் இரண்டாவது மொழியாக அன்றைய முதல்வர் பன்சி லால் அறிவித்துள்ளார்.

1969 முதல் 2010 வரையில் தமிழ் மொழி இரண்டாவது அதிகாரப்பூர்வ மாநில மொழியாக இருந்ததாகவும், 2010-ல் காங்கிரஸ் முதல்வர் பூபிந்தர் சிங் ஹோடா தமிழுக்கு பதிலாக பஞ்சாபி மொழியை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இது உண்மையா என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

ஏனெனில், இதே கதையில் தென்னிந்திய மொழியான தெலுங்கு மொழியை வைத்தும் கூறியுள்ளனர். ஆக, இது தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

ஹரியானா மொழிச் சட்டம் :

ஹரியானாவில் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக ஹிந்தி உள்ளது. 1969-ல் அதிகாரப்பூர்வ மொழிக் குறித்த சட்டத்தில் ஹிந்தி மற்றும் அதனை மொழி மாற்றம் செய்ய ஆங்கிலமும் பயன்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

2004 டிசம்பரில் The Haryana official language act-ல் ஹரியானாவின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக பஞ்சாபியை சட்டத் திருத்தம் கொண்டு வந்து அதனை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தனர். எனினும், 2009-ல் பூபிந்தர் சிங் ஹோடா தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி 2010-ல் ஹரியானாவின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக பஞ்சாபி அறிவிக்கப்பட்டது.

இதுவரை The Haryana official language act-ல் மூன்று முறை சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில், ஒன்றில் கூட தமிழ் மொழியோ அல்லது தெலுங்கு மொழிக் குறித்தோ எந்த குறிப்பும் இல்லை. 2004 சட்டத் திருத்தத்திலும் கூட தமிழ் மொழி குறித்து குறிப்பு இல்லை.

பகிர்ந்தவர் யார் ?

ஹரியானாவில் தற்போதைய ஆட்சியில் இருப்பது பிஜேபி அரசு. அவர் தமிழில் பேசிய வீடியோவை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்மற்றும் Tamilnadu bjp youth wing vice president SG Suryah .

ஹரியானா முதல்வர் தமிழில் பேசியது வரவேற்கக்கூடிய ஒன்றாக இருந்தாலும் ஹரியானாவில் தமிழ் மொழி 40 ஆண்டுகளாக அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader