ஹத்ராஸ் எம்பி தலித் என்பதால் பாஜக அலுவலகத்தில் தரையில் அமர வைக்கப்பட்டாரா ?

பரவிய செய்தி

பா.ஜ.க அலுவலகத்தில் தரையில் அமர வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் தொகுதி மக்களவை உறுப்பினர் ரஜ்வீர் சிங் தில்வார், தனது தொகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்திய போது அவர் தரையில் அமரவைக்கப்பட்டு கையில் பிளாஸ்டிக் குவளையில் தேநீர் கொடுக்கப்பட்டது. இருக்கையில் அமர்ந்திருப்பவர் அப்பகுதியில் உள்ள உயர்சாதி பாஜக பிரமுகர்.

Facebook link | archive link

மதிப்பீடு

விளக்கம்

ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அந்த தொகுதியின் எம்.பி கலந்தாய்வு நடத்திய போது அவரை பாஜக அலுவலகத்திலேயே தரையில் அமர வைத்து, தனியாக பிளாஸ்டிக் குவளையில் தேநீர் தரப்பட்டு உள்ளதாக இப்புகைப்படத்துடன் கூடிய செய்தி முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Facebook link | Archive link 

ஆதிக்கச் சாதியை சேர்ந்த ஒருவர் இருக்கையில் அமர்ந்து இருக்க, ஒரு எம்பி தரையில் உட்கார வைக்கப்பட்டு இருப்பதாக உத்தரப் பிரதேசத்தில் நிலவும் சாதி பாகுபாடு எனக் கூறி ஆயிரக்கணக்கில் பகிரப்படும் இப்பதிவின் உண்மைத்தன்மை குறித்து பதிவிடுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

புகைப்படத்தில் தரையில் அமர்ந்து இருப்பவர் ஹத்ராஸ் தொகுதி எம்பி ரஜ்வீர் சிங் திலர் என்பது உண்மையே. அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அவர் தரையில் அமர்ந்து தனி குவளையில் தேநீர் அருந்தியது நிகழ்ந்த்திருக்கிறது, ஆனால் அந்த சம்பவம் சமீபத்தில் எம்.பியாக இருக்கும் போது நிகழவில்லை என அறிய முடிந்தது.

Advertisement

2017-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியாவில், ” இங்குள்ள ஒரு தலித் பாஜக வேட்பாளர்(ரஜ்வீர் சிங் திலர்) உயர்சாதி வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது தரையில் அமர்வது மட்டுமில்லாமல், தேநீர் குடிக்க ஒரு குவளையையும் எடுத்துச் செல்ல மறக்கமாட்டார்.

இந்த பகுதி 90,000 பேரைக் கொண்ட ஜாட் வாக்காளர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. அவர்களே வெற்றியை தீர்மானிக்கின்றனர். எனவே இங்குள்ள மற்ற தலித் வேட்பாளர்கள் உயர்சாதி வாக்காளர்களுக்கு மரியாதை அளிக்கும் போது, அவர் அதை தீவிரமான எடுத்துச் செல்கிறார். தரையில் அமர்ந்து தனக்கென்று ஒரு குவளையை பயன்படுத்துவது ” பரம்பரகத் ஆதாத் (குடும்ப வழக்கம்) என திலர் அழைக்கிறார். இவரின் தந்தை கிஷன் லால் எம்எல்ஏ ஆகவும், எம்பி ஆகவும் இருந்தவர் ” என வெளியாகி இருக்கிறது.

ஹத்ராஸ் தொகுதியின் எம்பி ரஜ்வீர் சிங் திலர் பாஜகவின் தலித் வேட்பாளராக இருந்த போது ஜாட் வாக்காளர்களிடம் இருந்து வாக்குகளை பெற சென்ற போது தரையில் அமர்வதும், தனி குவளையில் தேநீர் அருந்தியும் உள்ளார். 2017-ல் பாஜகவின் வேட்பாளராக இருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஹத்ராஸ் எம்பி தி பிரிண்ட்க்கு அளித்த பேட்டியில், ” இறுதி சடங்குகளை காலையில் செய்ய மாவட்ட நீதிபதியிடம் கேட்டேன். ஆனால், அவர் என் பேச்சை கேட்கவில்லை. உடலை தகனம் செய்வதை காவல்துறையினரும் எனக்கு தெரிவிக்கவில்லை. எனினும், நான் அங்கு சென்று இருந்தேன். ஆனால் மோதல் உருவாகும் என பயந்து போலீஸ் நிலையத்திற்கு செல்லுமாறு காவல்துறை என்னிடம் கேட்டுக் கொண்டனர். நான் ஒரு எம்.பி ஆக வெட்கப்படுகிறேன். வால்மீகி சமூகத்திடம், அவர்களின் பெண்ணுக்கு நீதி கிடைக்கத் தவறினால் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய நான் தயாராக இருக்கிறேன் ” எனக் கூறியுள்ளதாக வெளியாகி இருக்கிறது.

பாஜக எம்பி ரஜ்வீர் சிங் திலர் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர். 2017-ல் வாக்கிற்காக ஆதிக்க சாதியினரின் வீடுகளுக்கு செல்லும் போது தரையில் அமர்வது, தனக்கென்று தனி குவளையை எடுத்துச் சென்று தேநீர் அருந்தி இருக்கிறார். அதை அவர் குடும்ப வழக்கமாகவே பார்ப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் வெளியாகி இருக்கிறது. ஆனால், அந்த சம்பவத்தை ஹத்ராஸ் சம்பவத்துடன் இணைந்து, பாஜக அலுவலகத்தில் நிகழ்ந்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button