மாரடைப்பைச் சரிசெய்யும் புதிய தொழில்நுட்பம் எனப் பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி
மாரடைப்பு பற்றிக் கவலைப்படுவதை இப்போதே நிறுத்துங்கள். புதிய தொழில்நுட்பத்தைப் பார்க்கவும். ஹார்ட் பிளாக்ஸ் இந்த வகை ஆஞ்சியோகிராபி மூலம் நேரடியாக நீக்கம். இந்த சிகிச்சை மும்பை ஜேஜே மருத்துவமனையில் கிடைக்கிறது.. விலை ₹5000 மட்டுமே. வீடியோவைப் பார்க்கவு.
மதிப்பீடு
விளக்கம்
புதிய வகை ஆஞ்சியோகிராபி மூலம் இதயத்தில் உள்ள அடைப்புகள் நேரடியாக நீக்கலாம், இனி மாரடைப்பைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும் இந்த சிகிச்சை மும்பை ஜே ஜே மருத்துவமனையில் வெறும் 5000 ரூபாயில் செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியான செய்தி மற்றும் வீடியோவை உங்கள் தொடர்பு எண்கள் மற்றும் குழுக்களுக்கு உடனடியாக அனுப்பவும்
மாரடைப்பு பற்றி கவலைப்படுவதை இப்போதே நிறுத்துங்கள்.
புதிய தொழில்நுட்பத்தைப் பார்க்கவும்.
ஹார்ட் பிளாக்ஸ் இந்த வகை ஆஞ்சியோகிராபி மூலம் நேரடியாக நீக்கம். இந்த சிகிட்சை pic.twitter.com/Hs4SjE24Ah— Thiruparkadal Kumarasamy (@TK_TUTICORIN) February 16, 2023
அந்த வீடியோவில், சிறிய நூல் போன்ற ஒன்றில் மாத்திரை கட்டப்பட்டுள்ளது. அதனை ஒருவர் விழுங்கியதும், மறுமுனையைப் பிடித்து இழுக்கப்படுகிறது.
உண்மை என்ன ?
அந்த வீடியோவில் ‘இன் தி நவ்’ என வாட்டர் மார்க் இருப்பதையும் காண முடிந்தது. அதனைக் கொண்டு இணையத்தில் தேடினோம். 2017, அக்டோபர் 8ம் தேதி இந்த வீடியோ இன் தி நவ் என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், பரவக் கூடிய வீடியோவில் ‘சைட்டோஸ்பான்ஜ்’ (Cytosponge), உணவுக்குழாய் புற்றுநோய் (Esophageal cancer) போன்ற வார்த்தைகள் இருப்பதைக் காண முடிந்தது. இதில் இருந்து சைட்டோஸ்பான்ஜ் என்னும் புதிய வகை மருத்துவ உபகரணம் கொண்டு உணவு குழாயில் புற்றுநோய் பரிசோதனை செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.
மாத்திரை வடிவிலான உரையில் சைட்டோஸ்பான்ஜ் அடைக்கப்பட்டுள்ளது. மாத்திரை விழுங்கியதும் வயிற்றினுள் அதன் உரை கரைந்து, அதிலுள்ள சைட்டோஸ்பான்ஜ் விரிந்துவிடும். பிறகு அதில் இணைக்கப்பட்டுள்ள நூலின் மறுமுனையை பிடித்து இழுக்கும் போது ஸ்பான்ஜ் உணவு குழாயில் இருந்து செல்களை கிரகித்துக் கொள்ளும். அந்த செல்களை கொண்டு உணவு குழாய் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்யப்படுகிறது.
இது குறித்து மேற்கொண்டு தேடுகையில், இந்த ஸ்பான்ஜை தயாரிக்கும் நிறுவனமான ‘ரிஃப்லக்ஸ்’ (Reflux) இணையதளத்தில் தகவல்கள் கிடைத்தது. அதில், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளின் போது பரிசோதனைக்காக எண்டோஸ்கோப் பயன்படுத்துவதற்கு மாற்றாக சைட்டோஸ்பான்ஜ் மூலம் பரிசோதனை மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யலாம். இந்த முறை உணவு குழாய் புற்றுநோயினை கண்டறிய உதவியாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை எப்படிச் செய்யப்படுகிறது என்னும் அனிமேஷன் வீடியோ ‘RefluxUK’ என்ற யூடியூப் பக்கத்தில் 2021, மார்ச் 11ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. இதிலிருந்து பரவக் கூடிய வீடியோவில் உள்ள மருத்துவ முறை மாரடைப்பிற்குச் செய்யப்படும் சிகிச்சை அல்ல என்பதை அறிய முடிகிறது.
மேலும், மும்பையில் உள்ள ஜே ஜே மருத்துவமனையில் ஆஞ்சியோகிராபி சிகிச்சை 5000 ரூபாய்க்குச் செய்யப்படுகிறதா என்பது குறித்துத் தேடினோம். 2016ம் ஆண்டு அம்மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் ஆஞ்சியோகிராம் செய்யப்படுவதாக வேறொரு வீடியோ யூடியூபில் பரவியுள்ளது.
இது குறித்து அம்மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் நரேந்திர பன்சால் அளித்த விளக்கம் 5 ஆண்டுகளுக்கு முன்னர் ‘மும்பை லைவ்’ என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர் “அந்த சிகிச்சை செய்ய 5000 ரூபாய் எனப் பரவும் தகவல் உண்மை அல்ல. அதற்கு சுமார் 40 முதல் 50 ஆயிரம் வரை செலவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முடிவு :
நம் தேடலில், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஹார்ட் பிளாக்ஸ் நீக்கப்படுவதாக இணையத்தில் பரவும் வீடியோ உண்மையல்ல. அது உணவுக் குழாய் புற்றுநோய் பரிசோதனைக்கான ஒரு முறை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.