HEC பணியாளரை சந்திரயான்-3 திட்டத்திற்கு ஏவுதளம் வடிவமைத்தவர் எனத் தவறாகச் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் !

பரவிய செய்தி

இட்லி விற்கும் ‘சந்திரயான் 3′ திட்ட பொறியாளர்! இஸ்ரோவின் ‘சந்திரயான் 3′ திட்டத்திற்கு ஏவுதளம் வடிவமைத்த ஜார்க்கண்ட்டை சேர்ந்த பொறியாளர் தீபக் குமார், 18 மாதங்கள் ஊதியம் வழங்காததால், செலவை சமாளிக்க இட்லி வியாபாரம் செய்து வருகிறார். பகலில் அலுவலகம் செல்லும் இவர் காலை, மாலை என இரு வேளைகளிலும் இட்லி விற்று வருகிறார்; இதன்மூலம் ஒரு நாளைக்கு ரூ.300 – ரூ.400 வரை சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

‘இஸ்ரோவின் ‘சந்திரயான் 3′ திட்டத்திற்கு ஏவுதளம் வடிவமைத்த ஜார்க்கண்ட்டை சேர்ந்த பொறியாளர் தீபக் குமார், 18 மாதங்கள் ஊதியம் வழங்காததால், செலவை சமாளிக்க இட்லி வியாபாரம் செய்து வருகிறார்’ என சன் செய்திகள் நியூஸ் கார்டு ஒன்றினை பதிவிட்டுள்ளது. 

Archive link  

இதே போன்று நியூஸ் 7, தீக்கதிர், Way 2 news போன்ற ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுள்ளது.

Twitter link | Archive link 

Archive link

உண்மை என்ன ?

சந்திரயான்-3 திட்டத்திற்கு ஏவுதளம் வடிவமைத்த பொறியாளருக்கு 18 மாதங்களாகச் சம்பளம் வழங்கவில்லை என ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் முக்கிய வார்த்தைகளைக் கொண்டு தேடினோம். இது தொடர்பாக பிபிசி ஹிந்தி தளத்தில் வெளியான ஒரு கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து ‘PIB Fact check’ (Press Information Bureau) தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கடந்த 18ம் தேதி (செப்டம்பர்) பதிவிட்டிருந்த ஒரு பதிவினை காண முடிந்தது.

அதில், சந்திரயான் 3-க்கான எந்த ஒரு கூறினையும் தயாரிக்க HEC-யிடம்  (Heavy Engineering Corporation) ஒப்படைக்கப்படவில்லை.  மேலும் 2003 செப்டம்பர் முதல் 2010 ஜனவரி வரையில் HEC இஸ்ரோவிற்கு சில உள்கட்டமைப்புகளை வழங்கியது. பிபிசி வைத்துள்ள தலைப்பு தவறாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு தேடியதில் மாநிலங்களவை உறுப்பினர் ​​பரிமள் நாத்வானி இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியும், அதற்கு ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சகம் அளித்த பதிலும் கிடைத்தது.

அந்த ஆவணத்தின் படி  ​​பரிமளா நாத்வானி முன்வைத்த கேள்விகள் : 

  • சந்திரயான்-3க்கு ஏவுதளம் மற்றும் பிற பாகங்களைத் தயாரிக்க ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷனின் (HEC) ராஞ்சி பிரிவு த்ருவா-விற்கு ஒதுக்கப்பட்டது என்பது உண்மையா.
  • HEC அல்லது அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை பிரிவுகள் சந்திரயான்-3 ஏவுதலை வெற்றிகரமாகச் செய்வதில் பங்களித்ததா?
  • HEC-ன் நிதி மற்றும் செயல்பாட்டு ஆரோக்கியத்தின் நிலை அறிக்கை.
  • சந்திரயான்-3 ஏவுதளத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள்/தொழில்நுட்ப நிபுணர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையா, அப்படியானால், அதன் விவரம் என்ன?

மேற்கண்ட கேள்விகளுக்கு கனரக தொழில்துறை இணை அமைச்சர் ஸ்ரீ கிரிஷன் பால் குர்ஜரின் அளித்த பதிலில், சந்திரயான்-3க்கான எந்த பாகங்களையும் தயாரிக்க HEC க்கு ஒதுக்கப்படவில்லை. இருப்பினும், HEC ஆனது 2003 செப்டம்பர் முதல் 2010 ஜனவரி வரையில் இஸ்ரோவின் உள்கட்டமைப்புக்காக ‘Mobile Launching Pedestal (MLP) and Hammer Head Tower Crane(10T), 400/60 T EOT crane, Folding cum Vertical Repositionable Platform (FCVRP) மற்றும் Horizontal sliding Doors (HSD)’ ஆகியவற்றை அளித்தது. 

மேலும், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதால், HEC ஒரு தனிச் சட்ட நிறுவனம். அதன் பணியாளருக்குச் சம்பளம் வழங்க தன் சொந்த ஆதாரங்களை அது உருவாக்க வேண்டும். தொடர்ச்சியான இழப்புகள் மற்றும் பெரும் பொறுப்புகள் காரணமாக, HEC கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளம் முறையே 14 மற்றும் 18 மாதங்கள் செலுத்தப்படாமல் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதியன்று ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்ட செய்தியிலும் இத்தகவல்கள் உள்ளது. பிபிசி இந்திக்குப் பேட்டி அளித்தவர் HEC பணியாளர். அவரை சந்திரயான்-3க்கான ஏவுதளம் வடிவமைத்தவர் எனத் தவறாகப் பொருள் கொள்ளும் வகையில் தமிழ் ஊடகங்கள் அத்தகைய செய்தியை வெளியிட்டுள்ளன.

சன் நியூஸ் கார்டில் அவரை HEC பணியாளர் என குறிப்பிடவில்லை. மாறாக சமூக வலைத்தள பதிவுகளில் HEC பணியாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் சில ஊடகங்கள் அவரை HEC ஊழியர் என சரியாக குறிப்பிட்டும், சந்திரயான்-3க்கான ஏவுதளம் வடிவமைத்தவர் எனத் தவறாகவும் குறிப்பிட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், சந்திரயான்-3 ஏவுதளம் வடிவமைத்தவருக்கு 18 மாதம் சம்பளம் வழங்கப்பட வில்லை என்பது தவறான கூற்று. அவர் ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷனின் (HEC) ஊழியர். அந்நிறுவனம் சந்திரயான்-3க்கான எந்த பாகங்களையும் வழங்கவில்லை என அமைச்சகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 18 மாதமாகச் சம்பளம் வழங்காதது உண்மைதான்.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader