கதிர் அறுக்க ஹெலிகாப்டரில் வந்தாரா எம்.பி ஹேமா மாலினி ?

பரவிய செய்தி
உலகின் பணக்கார விவசாய தொழிலாளி உ.பி-ல் உள்ளார். கதிர் அறுக்க ஹெலிகாப்டரில் தான் தினமும் செல்வார்.
மதிப்பீடு
சுருக்கம்
2014 மற்றும் 2015-ல் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைத்து தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்.
விளக்கம்
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவின் பிஜேபி எம்.பியான ஹேமா மாலினி தேர்தல் நேரம் என்பதால் தன் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று நிலத்தில் கதிர்களை அறுப்பது போன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் ஹேமா மாலினி ஹெலிகாப்டரில் அமர்ந்து இருக்கும் படம் மற்றும் கதிர் அறுக்கும் இரு புகைப்படங்களும் ஆயிரக்கணக்கான ஷேர், லைக்களை பெற்று பரவிக் கொண்டே இருக்கிறது.
ஹேமா மாலினி ஹெலிகாப்டரில் அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் தற்பொழுது எடுக்கப்பட்டவை அல்ல. அவை 2015 ஆம் ஆண்டில் அக்டோபரில் பாட்னாவில் எடுக்கப்பட்டது. இப்படத்தினை ஹேமா மாலினி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
நிலத்தில் கோதுமை பயிர்களை ஹேமா மாலினி அறுப்பது போன்ற புகைப்படங்கள் 2014 ஏப்ரல் மாதம் 10-ம் தேதி hema malini என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. இதே படங்களும் Amarujala என்ற இணையத்தளத்திலும் பதிவிடப்பட்டு உள்ளது.
2019 மார்ச் மாதத்தில் லோக்சபா தேர்தலுக்காக தன் முதல் நாள் பிரச்சாரத்தை கோதுமை விவசாய நிலத்தில் இருந்து மீண்டும் துவங்கி உள்ளார் ஹேமா மாலினி. அப்பொழுது பச்சை நிற புடவையில் இல்லை. கோல்டன் நிற புடவையில் உள்ளார்.
இதே போன்று 2016-ல் ஹெலிகாப்டரில் இருந்து காருக்கு செல்லும் ஹேமா மாலினி வீடியோக்கள் தற்போது மீண்டும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
தேர்தல் நேரத்தில் நிலத்தில் இறங்கி மக்களோடு மக்களாக வேலை செய்வது எல்லாம் ஆண்டாண்டு காலமாய் பார்த்து பழகியதே. எனினும், 2014 மற்றும் 2015-ல் வெவ்வேறு இடத்தில் எடுக்கப்பட்ட ஹேமா மாலினியின் புகைப்படங்களை இணைத்து வதந்தியை பரப்பி உள்ளனர்.