இமாச்சல பிரதேசத்தில் குர்குரே திருடியதால் தாக்கப்பட்ட சிறுவன் எனப் பரவும் 2016 வெளியான புகைப்படம் !

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுவன் குர்குரே திருடியதாகக் கூறி அடித்து, கண்களில் மிளகாய்ப் பொடி தூவி நிர்வாணமாக அழைத்துச் சென்றுள்ளனர். அங்குக் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்வதால் இது விவாதமாக மாறாது எனப் புகைப்படம் ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஹிமாச்சல் பிரதேசத்தில், 15 வயது சிறுவன் குர்கரே திருடியதாக கூறி, அடித்து உதைத்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி நிர்வாணமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இது விவாதம் ஆகாது. ஏனென்றால், அங்கே காங்கிரஸ் ஆட்சி. pic.twitter.com/flDein1HS9
— Muthukumar Subbaiah (@smkumarlakshmi) August 6, 2023
உண்மை என்ன ?
இமாச்சல் பிரதேசத்தில் 15 வயது சிறுவன் தாக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடியதில், அது 2016, ஏப்ரல் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த வேறொரு சம்பவம் என்பதை அறிய முடிந்தது.
பரவக் கூடிய புகைப்படத்துடன் 2016, ஏப்ரல் 5ம் தேதி ‘Deccan Herald’ இணைய தளத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று மைனர் தலித் சிறுவர்களை ஒரு கும்பல் அடித்து, நிர்வாணப்படுத்தியது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அச்செய்தியில் சித்தூர்கர் எஸ்.பி. பிரசன் குமார் கம்சேரா கூறியது, லக்ஷ்மிபுராவில் சனிக்கிழமையன்று திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மூன்று சிறுவர்களைப் பிடித்த உள்ளூர் மக்கள் அவர்களின் ஆடைகளை அவிழ்த்து அடித்துள்ளனர். காவல் துறையினர் அவர்களையும் மோட்டார் சைக்கிளையும் மீட்டு உள்ளூர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர் என்றுள்ளது.
இந்த சம்பவம் ஜாதி ரீதியிலான பிரச்சனை இல்லை என்றும், சிறுவர்களைத் தாக்கியதற்காகக் கைது செய்யப்பட்ட 6 பேரில் 3 பேர் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் ‘DNA’ இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியிலும் இது ராஜஸ்தான் மாநிலத்தில் 2016ம் ஆண்டு நடந்தது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ‘NewspointTV’ என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும் இத்தகவல்களைக் காண முடிகிறது. இந்த சம்பவம் நடந்த 2016ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியிலிருந்தது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு தேடியதில் சிம்லாவில் 15 வயது சிறுவன் சிப்ஸ் பாக்கெட்டைத் திருடியதற்காக அடித்து நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் கடந்த மாதம் (ஜூலை) 31ம் தேதி நடந்துள்ளதைக் காண முடிந்தது. இது தொடர்பாக ‘தி இந்து’ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அச்சிறுவனைத் தாக்கிய 7 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தி குறித்த பதிவுகளில் ராஜஸ்தானில் 2016ம் ஆண்டு நடந்த நிகழ்வின் புகைப்படத்தைத் தவறாகப் பதிவிட்டு வருகின்றனர்.
முடிவு :
நம் தேடலில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாச்சல் பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டதாகப் பரவும் தகவல் உண்மையே. ஆனால், அப்பதிவுகளில் பயன்படுத்தப்படும் புகைப்படம் 2016ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த வேறு சம்பவத்துடன் தொடர்புடையது என்பதை அறிய முடிகிறது.