இந்துக்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்காதீர்கள் என இமாலயா உரிமையாளர் கூறுவதாகப் பரவும் வதந்தி!

பரவிய செய்தி
இவர்தான் இமாலயா கம்பெனி உரிமையாளர்.. இந்துக்கள் நடத்தும் நிறுவனங்கள் தயாரிக்கும் எந்த பொருளையும் வாங்காதீர்கள் என்று சொல்கிறார். இந்துக்களுக்கு புரிந்தால் நல்லது..
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் “இந்துக்கள் நடத்தும் நிறுவனங்கள் தயாரிக்கும் எந்த பொருளையும் வாங்காதீர்கள் என்று ஹிமாலயா நிறுவனர் கூறுவதைப் பாருங்கள். இது இந்துக்களுக்குப் புரிந்தால் நல்லது.” என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
இவர்தான் இமாலயா கம்பெனி உரிமையாளர்..இந்துக்கள் நடத்தும் நிறுவனங்கள் தயாரிக்கும் எந்த பொருளையும் வாங்காதீர்கள் என்று சொல்கிறார். இந்துக்களுக்கு புரிந்தால் நல்லது.. pic.twitter.com/Qsff9K5s0D
— S.வேலு ஜி (@VELUjjj) September 17, 2023
மேலும் பரவி வரும் வீடியோவில், அந்த நபர் ஜியோ போன்கள் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பெட்ரோல் பம்புகளை புறக்கணிக்க அழைப்பு விடுப்பதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இந்த வீடியோவில் இருப்பவர் ஹிமாலயா நிறுவனத்தின் நிறுவனர் அல்ல என்பதை அறிய முடிந்தது.
இது குறித்து ஆய்வு செய்ததில் இந்த வீடியோவில் இருப்பவர் டெல்லியைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞரான பானு பிரதாப் சிங் என்பதையும், ஹிமாலயா நிறுவனத்தின் நிறுவனர் முகம்மது மணல் 1986-லேயே இறந்துவிட்டார் என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும் பரவி வரும் வீடியோவில் ‘Times Express’ என்று குறிப்பிட்டிருந்ததால், அவர்களது யூடியூப் பக்கத்தில் இது குறித்துத் தேடினோம். இந்த வீடியோ கடந்த 2020, ஜனவரி 25ம் தேதியன்று CAA-க்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது. அதன் தலைப்பில் ‘Bhanu Pratap Singh‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேடையில் நின்று பேசுபவரைச் சுற்றியிருப்பவர்கள் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-ஐ நிராகரிக்கவும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருப்பதையும் காண முடிகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவானது, அந்த முழுமையான வீடியோவில் 4வது நிமிடம் 36வது வினாடியில் இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம் இந்த வீடியோவில் இருப்பவர் ஹிமாலயா நிறுவனத்தின் நிறுவனரான முகம்மது மணல் இல்லை என்பதை ஆய்வின் முடிவில் கண்டறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், இந்துக்கள் தயாரிக்கும் எந்த பொருளையும் வாங்காதீர்கள் என ஹிமாலயா நிறுவனர் கூறியதாகப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், அவ்வீடியோவில் இருப்பவர் டெல்லியைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞரான பானு பிரதாப் சிங் என்பதையும் அறிய முடிகிறது.