இமயமலையில் 99 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சிவலிங்க பூவா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
” சிவலிங்கப் பூ ” இமயமலைப் பிரதேசத்தில் ” 99 ” ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்குமாம் ! இதனைப் பார்ப்பதே புண்ணியம் !
மதிப்பீடு
விளக்கம்
வித்தியாசமான தோற்றங்களில் இருக்கும் பூக்களை இமயமலையில் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அரிதான மலர், தெய்வீக மலர் என அடைமொழியுடன் பகிர்வதை கடந்த சில ஆண்டுகளாகவே நாம் அதிகம் பார்த்து வருகிறோம்.
தற்போது இமயமலையில் 99 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சிவலிங்க பூ எனக் கூறி ஓர் புகைப்படம் கடந்த ஆண்டில் இருந்தே வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து யூடர்ன் ஃபாலோயர்கள் தரப்பிலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
சிவலிங்க பூ எனக் கூறும் புகைப்படம் தொடர்பாக தேடிய போது, சைக்காஸ் என அழைக்கப்படும் தாவர வகையின் மலர் என அறிய முடிந்தது. பனை மரத்தினை போன்ற தோற்றத்தில் இருக்கும் இத்தாவரம் வீடுகளில் அழகிற்காக கூட வளர்க்கப்படுகின்றன.
சிவலிங்க பூ என வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருப்பது குயின் சாகோ என அழைக்கப்படும் சைக்காஸ் சர்ஸினாலிஸ் தாவரத்தின் ஆண் மலராகும். சைக்காஸ் வகை தாவரங்கள் பெரும்பாலும் நட்சத்திர விடுதிகளின் நுழைவாயில், வீட்டுத் திட்டங்களிலும் அழகுக்காக வளர்க்கப்படும். தமிழகத்தில் காணப்படும் சைக்காஸ் ரெவலியூட்டா எனும் வகை தாவரம் 18 முதல் 20 ஆண்டுகளில் பூக்கும்.
மேலும் படிக்க : 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பகோடா மலரா ?| ஃபேஸ்புக் வதந்தி.
100 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அரிதான மலர்கள், இமயமலையில் பூக்கும் மலர்கள் என இணையத்தில் கிடைக்கும் புகைப்படங்கள் பலவற்றை தவறான தகவலுடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
மேலும் படிக்க : இமயமலையில் பெண் வடிவில் பூக்கும் அரிதானப் பூக்களா ?
முடிவு :
நம் தேடலில், இமயமலைப் பிரதேசத்தில் ” 99 ” ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் சிவலிங்க பூ என வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது சைக்காஸ் சர்ஸினாலிஸ் தாவரத்தின் ஆண் மலர் என அறிய முடிகிறது.