8-ம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமா ?| மத்திய அமைச்சர் விளக்கம்.

பரவிய செய்தி
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரையில் அனைவருக்கும் இந்தி பாடம் கட்டாயமாக்கப்பட்ட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதாக பரவிய வதந்தி செய்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்க மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் விளக்கம் அளித்துள்ளார்.
விளக்கம்
இந்தி மொழியை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 8-ம் வகுப்புகளுக்கு வரை கட்டாயமாக்கப்பட உள்ளதாகவும், அதற்கான புதிய கல்வி வரைவுக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வருவதாகவும் இணையத்தில் அதிவேகமாக பரவியது.
ஏற்கனவே இந்தி திணிப்பிற்கு வலுவான எதிர்ப்பு தெரிவிக்கும் தென்னிந்திய மாநிலங்களில் இச்செய்தி அதிகம் பரவி எதிர்ப்புகள் உருவாகியது. பாடத்திட்டத்தில் இந்தி மொழியை சேர்க்க வேண்டும் என்ற பலரின் கோரிக்கைக்கு எதிர்ப்புகள் இங்கு இருந்து வருகிறது.
செய்தியின் விளைவை அறிந்த உடன் அதற்கான விளக்கத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் ட்விட்டர் மூலம் தெரிவித்து உள்ளார்.
“ புதிய கல்வி கொள்கைப் பற்றிய குழுவின் வரைவு அறிக்கையில் எந்தவொரு மொழியையும் கட்டாயமாக்க பரிந்துரை செய்வதாக குறிப்பிடவில்லை. ஊடகங்களின் சில பிரிவிகளில் வெளியான தவறான அறிக்கைகளுக்காக இந்த விளக்கம் தேவைப்படுகிறது “ என தெரிவித்து உள்ளார்.
8-ம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் என்ற உணர்ச்சிவயப்பட வைக்கும் முக்கிய செய்தியின் தன்மை அறிந்து மத்திய அமைச்சர் உடனடியான விளக்கத்தை அளித்து உள்ளார்.
இந்தியா முழுவதும் இந்தி மொழி கட்டாயமாக்க புதிய கல்விக் கொள்கை ஏதும் பரிந்துரை செய்யப்படவில்லை என்பதை தெளிவாகிறது.