ஹிந்தி, சமஸ்கிருதத்திற்கு எதிரான போக்கு மாறாவிட்டால் தமிழகத்திற்கு நிதி கிடைக்காது என்றாரா அமித்ஷா ?

பரவிய செய்தி
தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது, பாகிஸ்தானில் அல்ல என்பதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும் . இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் மத்திய அரசு நிதி கிடைக்காது – அமித்ஷா
மதிப்பீடு
விளக்கம்
தமிழக அரசியல் வட்டாரத்திலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி இந்தி மொழி திணிப்பு பற்றிய பேச்சுக்கள் தொடர்ந்து பேசுப் பொருளாக இருந்து வருகிறது. தற்போது இந்திய அளவில் சினிமா வட்டாரங்களிலும் இந்தி மொழி பற்றி கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், தமிழக அரசு இந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழிகளுக்கு எதிரான போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் நிதி கிடைக்காது என அமித்ஷா கூறியதாக ஜெயா பிளஸ் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
உள்துறை அமைச்சர் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு அரசு மாற்றிக் கொள்ளாவிட்டால் நிதி கிடைக்காது எனக் கூறியதாக செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.
ஆகையால், ஜெயா ப்ளஸ் சேனலின் முகநூல் பக்கத்தில் ஆராய்கையில், “நாடு முழுவதும் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு, மின் பற்றாக்குறை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை ” என மே 2-ம் தேதி வெளியான செய்தி மட்டுமே கிடைத்தது.
மே 2-ம் தேதி அமித்ஷா குறித்து வெளியான நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசு நிதி கிடைக்காது என அமித்ஷா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.