This article is from Jul 20, 2019

இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்கள் அனைத்தும் இந்துக்களுக்கு சொந்தமானதா ?

பரவிய செய்தி

இந்தியாவில் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் பிராமணர்களுடையது. இதில், மிகப்பெரிய உண்மை திரு மோடி அவர்கள் கடந்த வருடம் சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100000 டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்ய கையெழுத்திட்டார்.

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் மாட்டிறைச்சி எப்பொழுதும் சர்ச்சை பொருளாகவே இருந்து வருகிறது. மாட்டிறைச்சி உண்பவர்கள் தாக்கப்படுவதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டிறைச்சி உணவை உண்பதாக சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் வழக்கமாகி விட்டது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் இந்துக்களுக்கு சொந்தமானவை மற்றும் அவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்கள் என்ற என்ற பதிவை சமூக வலைதளங்களில் காண முடிந்தது.

இந்தியாவில் இருந்து மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படும் நிறுவனங்களின் முழு விவரங்கள் குறித்து ஆராய்ந்த பொழுது Approved Indian Abattoirs cum Meat Processing Plants என்ற அதிகாரப்பூர்வ மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்கள் விவரங்கள் கிடைத்தன. அந்த பட்டியலில் மாட்டிறைச்சி உள்ளிட்ட இறைச்சி ஏற்றுமதி செய்யும் 56 நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. கிளை நிறுவனங்களுடன் சேர்த்து நூற்றுக்கணக்கில் சேரும்.

சமூக வலைதளத்தில் பரவிய செய்தியில் முதலில் இருக்கும் Al khabir exports india pvt ltd என்ற ஏற்றுமதி நிறுவனமே மேற்கண்ட பட்டியலிலும் முதலில் இடம்பெற்று இருந்தது. Al khabir நிறுவனத்தின் உரிமையாளர் சதீஷ் சுபர்வால் அந்நிறுவனத்தின் உரிமையாளர் எனக் குறிப்பிட்டு இருந்தனர். அல் கபீர் என்பதற்கு அரபியில் பெரிதான ஒன்று என்று பொருள். அப்பெயர் வைத்ததற்கு விளக்கமும் அளித்து உள்ளனர்.

இந்நிறுவனத்தின் தலைமையிடம் மும்பையில் அமைந்து இருக்கிறது. 2007-ல் வெளியான அல் கபீர் நிறுவனம் குறித்த செய்தியில் Subberwal and Shaikh குடும்பத்தினருக்கு இடையே 50:50 பங்கில் அந்நிறுவனம் இயங்குவதாக குறிப்பிட்டு இருந்தனர். அல் கபீர் நிறுவனத்தின் வர்த்தகம் 2016-ம் ஆண்ட்டில் மட்டும் 650 கோடியாகும்.

சதீஷ் சுபர்வால் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. அதுமட்டுமின்றி, ஏற்றுமதியாளர்கள் பட்டியலில் உள்ள சில இந்துக்களின் பெயர்களை மட்டுமே மீம் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் அதிக அளவில் முஸ்லீம் நிறுவனங்களும், சில இந்து நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. ஏற்றுமதியாளர்களின் விவரங்களின் பட்டியலில் எருமை மாட்டிறைச்சி, ஆடு மற்றும் செம்மறியாடு உள்ளிட்டவையின் இறைச்சியையே ஏற்றுமதி செய்கின்றனர். பசு மாட்டின் இறைச்சி என எங்கும் குறிப்பிடவில்லை.

2017-ல் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசில், ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இருப்பதாக Export genius என்ற தளத்தில் வெளியாகி இருந்தது. அதில், இந்தியாவில் எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதல் 10 இடங்களை பிடித்த நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு இருந்தன. 2017 தரவுகளின்படி, Allanasons pvt ltd என்ற நிறுவனம் 312.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உடன் முதல் இடத்தில் இருந்துள்ளது.

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்துக்கள் :

இந்தியாவில் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்களில் 10 பேர் இந்துக்கள் என பிபிசி 2017-ல் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதன்படி, இந்தியாவில் மத்திய வர்த்தக அமைச்சகத்தின், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின்(APEDA) அனுமதி பெற்ற 74 இறைச்சிக் கூடங்களில் 10 இறைச்சி கூடங்கள் இந்துக்களுக்கு சொந்தமானவை. அதுமட்டுமின்றி, நாட்டின் மிகப்பெரிய மற்றும் நவீன இறைச்சிக் கூடங்கள் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு சொந்தமானது எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

அல் கபீர் உடைய உரிமையாளர் சதீஷ் சுபர்வால், அரேபியன் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் கபூர், எம்.கே.ஆர். ஃப்ரோஸன் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் மதன் ஏவட் உள்ளிட்ட இந்துக்கள் நடத்தும் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களும் இந்தியாவில் முதன்மையானவை.

மாட்டிறைச்சி தொழிலில் மதமில்லை :

அல் கபீர் நிறுவனத்தின் மத்திய-கிழக்கு நாடுகளின் தலைவரான சுரேஷ் சுப்ரவால் பிபிசி அளித்த தகவலில், ” மதமும், வணிகமும் இரண்டும் வெவ்வேறு விசயங்கள். இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ளக் கூடாது. ஒரு இந்து மாட்டிறைச்சி தொழிலிலும், ஒரு இஸ்லாமியர் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டால் அதில் என்ன தவறு இருக்கிறது ? ” என கூறி இருந்தார்.

தமிழகத்தில் சென்னை நகரில் உள்ள அஸ்வினி ஆக்ரோ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேந்திரன் கூறுகையில், ” மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விசயம். அதனை தொழில் உடன் இணைத்து பார்க்க கூடாது ” எனத் தெரிவித்து இருக்கின்றனர்.

சீனாவிற்கு இந்தியாவில் இருந்து டன் எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதியாவது தொடர்பான செய்திகள் வெளியாகி உள்ளன. அதில், இந்தியாவில் இருந்து எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்த செய்திகள் இடம்பெற்று இருக்கின்றன. ஆனால், 1 லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதியாகிறது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

முடிவு :

சமூக வலைதளத்தில் பரவிய பதிவுகளில் மட்டுமின்றி சில இணையதள பக்கங்களிலும் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்துக்களின் நிறுவனங்கள் மட்டுமே இருப்பதாக கூறுவது தவறான தகவல். பிபிசி தகவலின் படி, இந்தியாவில் உள்ள 74 மிகப்பெரிய இறைச்சி கூடங்களில் 10 இந்துக்களுக்கு சொந்தமானவை.

பி.எம்.எல் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதாக குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், பிபிசி அளித்த தகவலில் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பட்டியலிலும் அந்நிறுவனத்தின் பெயர்கள் இடம்பெறவில்லை.

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவில் எருமை மாட்டின் இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதில் இந்துக்களே அதிகம், முஸ்லீம்களே அதிகம் மாறி மாறி சமூக வலைதளங்களில் பகிர்ந்து சட்டையிட்டுக் கொள்கின்றனர்.

ஆனால், மாட்டிறைச்சி தொழில் உள்ள இந்துக்கள் அனைவரும் ” தொழில் வேறு, மதம் வேறு ” என்ற கருத்தையே தெரிவிக்கின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader