இந்து கோயில்களில் திருமணம் செய்வதற்கான கட்டணத்தை அரசு ரூ.50,000ஆக உயர்த்தியதாக பாஜக பரப்பும் பொய் !

இந்து சமய அறநிலையத்துறை ஏழை எளிய இணைகளுக்கு நடத்தும் இலவச திருமண திட்டத்திற்கான தொகை ரூ.20,000லிருந்து ரூ.50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பரவிய செய்தி

திருமணத்திற்குத் தாலிக்கு தங்கம் இல்லை ! கோவில்களில் கல்யாணம் செய்ய அனுமதியும் ௫50,000 மும் வசுலிக்கும் இந்த விடியா அரசு, திருமணத்திற்கும் எதிரான அரசு !!

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

ந்து கோயில்களில் திருமணம் செய்வதற்கான செலவினத் தொகையை ரூபாய் 20 ஆயிரத்திலிருந்து ரூபாய் 50 ஆயிரமாகத் தமிழ்நாடு அரசு உயர்த்தி உள்ளது. இதனால் கோயில்களில் திருமணம் செய்யும் இந்துக்கள் பாதிக்கப்படுவார்கள் என பாஜக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றைப் பரப்பி வருகின்றனர்.

https://twitter.com/stockrama/status/1628398069959249923

Archive link 

Archive link 

பாஜகவின் சிந்தனையாளர் பிரிவின் துணைத் தலைவர் செல்வகுமார், வசதி உள்ளவர்கள் மட்டுமே கோயில்களில் திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ட்வீட் செய்து பின்னர் நீக்கியுள்ளார்.

உண்மை என்ன ? 

இந்து கோயில்களில் திருமணம் செய்வதற்கான கட்டணம் ஏதேனும் உயர்த்தப்பட்டுள்ளதாக என்பது குறித்தும், தந்தி டிவி நியூஸ் கார்டு குறித்தும் இணையத்தில் தேடினோம். 

கடந்த 22ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை மூலம் கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்துக்கான செலவுத் தொகை ரூபாய் 20 ஆயிரத்திலிருந்து ரூபாய் 50 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்  கோயில்களில் ஏழை எளிய இணைகளுக்கு அரசு நடத்தி வைக்கும் இலவச திருமணத்திற்கான செலவுத் தொகை ரூ.15,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டது. 

இந்த திட்டத்தின் மூலம், ஆண்டுதோறும் ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஏழை எளிய இணைகள் வீதம், 20 மண்டலங்களில் 500 இணைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. இதற்குத் தேவைப்படும் ஒரு கோடி ரூபாயைத் திருக்கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி 217 இணைகளுக்குத் திருமணம் செய்து வைத்து சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு இணைக்கு 20,000ம் ரூபாய் என இருந்த இத்திட்ட தொகையை, 50,000 ரூபாய் என உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. மீதமுள்ள 283 ஏழை எளிய இணைகளுக்குத் திருக்கோயில் மூலம் இலவசத் திருமணம் செய்து 50,000 ரூபாய்க்கான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்படும் எனப் பொருட்களுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து ‘தந்தி டிவி’ நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருமணம் செய்வதற்கான செலவினத் தொகையை உயர்த்தி அரசு அரசாணை. செலவினத் தொகையை ரூ.20,000லிருந்து ரூ.50,000ஆக உயர்த்தி உத்தரவு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Archive link 

அந்த நியூஸ் கார்டில் உள்ள செய்தி, அத்திட்டம் குறித்து முழுமையாகப் புரியும்படியாக  இல்லை. எனவே இது இந்து கோயில்களில்  திருமணம் செய்வதற்கான கட்டணம் எனத் தவறாகப் புரிந்து கொண்டு பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.

அந்த 50 ஆயிரம் ரூபாய் என்பது, இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடத்தப்படும் ஏழை எளியவர்களுக்கான இலவச திருமணத் திட்டத்தின் கீழ் இந்துக்களுக்கு அளிக்கப்படும் தொகை என்னும் அடிப்படையைக் கூட தெரிந்து கொள்ளாமல் ஒரு தவறான தகவலைப் பரப்புகின்றனர்.

மேலும் படிக்க : கல்யாண் ராமன் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாக தவறாக பரப்பிய செல்வ குமார் !

முன்னதாக பாஜக கட்சியில் உள்ள செல்வகுமார் அக்கட்சியை சேர்ந்த கல்யாண் ராமன் அதிமுகவில் இணைந்ததாக ஒரு தவறான செய்தியை பரப்பினார். அது குறித்த உண்மைத் தன்மையினை யூடர்ன் செய்தியாக வெளியிட்டிருந்தது.

முடிவு : 

நம் தேடலில், இந்து கோயில்களில் திருமணம் செய்வதற்கான தொகை உயர்த்தப்பட்டுவிட்டதாக பாஜகவினர் பரப்பும் தகவல் உண்மை அல்ல. அது இந்து சமய அறநிலையத்துறை மூலம் ஏழை எளியவர்களுக்கு நடத்தப்படும் இலவச திருமணத்திற்காக வழங்கப்படும் உதவித் தொகை ரூ.20,000லிருந்து ரூ.50,000ஆக உயர்த்தப்பட்ட செய்தி என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.
ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader