திமுக அரசு இஸ்லாமிய அமைப்புடன் இணைந்து இந்துகளுக்கு எதிராக வழக்கு எனத் திரித்து பரப்பப்படும் பழைய செய்தி !

பரவிய செய்தி

*இந்துக் கோவிலுக்கான அதிரடி நீதிமன்ற தீர்ப்பு!* பெரம்பலூர் மாவட்டத்தில் களத்தூர் கிராமம், முசுலிம்கள் அதிகம். அங்கே சிலை வைத்து ஹிந்துக்கள் பூஜை செய்வது இஸ்லாத்துக்கு எதிரானது எனவே தடை செய்ய ஸ்டாலின் மற்றும் தோழமை அமைப்புகள் மற்றும் முஸ்லிம் அமைச்சர் மஸ்தான்&நாசர் தலைமையில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது இஸ்லாமிய அமைப்புகள்!

ஆனால் *உயர் நீதிமன்றம் ஹிந்துக்கள் இப்படி நினைத்தால் உங்கள் நிலை என்னாகும்? எனக்கேட்டு தள்ளுபடி செய்துள்ளது!* ஆனால் தமிழ் நாட்டிலுள்ள செய்தி சேனல்கள், முன் களப் பணியாளர்கள் ஆகிவிட்டதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் செய்தி வெளியிடவில்லை! அடுத்த மாநில செய்தி ஊடகத்தினரே ஊடக அறம் காத்து செய்தி வெளியிட்டுள்ளனர் !

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

“பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களத்தூர் கிராமத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிப்பதால் இந்துக்கள் சிலை வைத்து பூஜை செய்ய தடை செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மஸ்தான், நாசர் தலைமையில் முஸ்லீம் அமைப்புகள் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்ததாகவும், இந்துக்களும் இப்படி நினைத்தால் உங்கள் நிலை என்னவாகும் எனக் கேட்டு உயர்நீதிமன்ற நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்துள்ளதாகவும், இதை பிற மாநில ஊடகங்கள் கூட வெளியிட்டு உள்ளதாகவும் ” கூறி ஃபார்வர்டு தகவல் மற்றும் மலையாள செய்தி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் கர்மா எனும் மலையாள செய்தி வீடியோ குறித்து தேடிய போது, 2021-ம் ஆண்டு மே 10-ம் தேதி யூடியூபில் பதிவாகி இருக்கிறது. மே 7 ம் தேதி தான் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர். அதுமட்டுமின்றி, இந்த மலையாள செய்தியில் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களின் பெயர்கள் ஏதும் குறிப்பிடவில்லை.

களத்தூர் கிராமம் கோவில் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு குறித்த செய்திகளை தேடிய போது, அது தொடர்பாக மே 8ம் தேதி தமிழ் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள வி.களத்தூர் கிராமத்தில் கிழக்கில் முஸ்லீம்கள், மேற்கில் இந்துக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள நான்கு கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி கோரி ராமசாமி உடையார் என்பவரும், எதிர்ப்பு தெரிவித்து சுன்னத் வால் ஜமாத் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பிரதான சாலையில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும் என சில நிபந்தனைகளுடன் திருவிழா நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி 2018-ல் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து இரு தரப்பினரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு 2021 ஏப்ரல் 30ம் தேதி வெளியிட்ட தீர்ப்பில், கோவில் விழாக்களின் போது கிராமங்களிலும், நகரங்களிலும் அனைத்து சாலைகளிலும், தெருக்களிலும் ஊர்வலங்களை ஒழுங்குப்படுத்தலாமே தவிர தடை விதிக்க முடியாது எனவும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி  ஊர்வலங்களை அனைத்து சாலைகளிலும் நடத்த அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

மேலும், மத சகிப்புத்தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதசார்பின்மைக்கு நல்லதல்ல, மாற்று மதத்தவரின் உணர்வுகளை புண்படுத்தாமல் மதஊர்வலங்களை நடத்த அனைத்து பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளது, கோவில் ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து ஊர்வலங்களும் அனைத்து சாலை மற்றும் தெருக்களில்  அனுமதிக்க வேண்டும், ஒரு மதப் பிரிவினரின் வழிப்பாட்டு தலம் உள்ளதால் மற்ற மதத்தினரின் ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்க முடியாது எனக் கூறி இரு தரப்பினருக்கும் எதிரான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

Twitter link 

தற்போது வைரல் செய்யப்படும் ஃபார்வர்டு தகவல் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வெளியாகி ஒரு மாதத்திற்கு பிறகு மலையாள செய்தி வீடியோ உடன் சமூக வலைதளங்களில் பரவத் துவங்கி உள்ளது. கடந்த ஆண்டு வெளியான அந்த பதிவில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களின் பெயர்களை இணைத்து தவறாகப் பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களத்தூர் கிராமத்தில் சிலை வைத்து இந்துக்கள் பூஜை செய்வது இஸ்லாத்துக்கு எதிரானது, அதை தடை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின், தோழமை அமைப்புகள் மற்றும் முஸ்லிம் அமைச்சர் மஸ்தான் & நாசர் தலைமையில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது இஸ்லாமிய அமைப்புகள் எனப் பரப்பப்படும் தகவல் தவறானது.

களத்தூர் கிராமத்தில் இந்து கோவில்களின் திருவிழா மற்றும் வழிபாடு நடத்த அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் 2018-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். அதன் பின்னர் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் 2021 ஏப்ரல் 30-ல் கோவில் திருவிழா மற்றும் அனைத்து தெருக்களிலும் ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து கடந்த ஆண்டே தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன என அறிய முடிகிறது.

 

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader