கேரள அரசு கோவில்களில் முஸ்லீம், கிறிஸ்தவ பாதிரியார்களை நியமித்ததாகப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி

கேரள அரசு கோவில்களில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்களை நியமித்துள்ளது. தற்போது ஹனுமான் ஜியின் உருவ சிலைக்கு சாராயம் பரிமாறப்படுகிறது இறைச்சி பரிமாறப்படுகிறது. அல்லா ஹோ அக்பர் என்று கோஷமிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கேடு கெட்டவர்கள் அழிக்கிறார்கள் நம்மை.

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

கேரள அரசு இந்துக் கோவில்களில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்களை நியமித்துள்ளது என்றும், ஹனுமன் உருவ சிலைக்கு சாராயம் மற்றும் இறைச்சி பரிமாறப்பட்டு, அல்லா ஹோ அக்பர் என்று பாடப்படுகிறது என்றும் கூறி, இஸ்லாமியப் பிரார்த்தனையுடன் இந்து சடங்குகளைக் காட்டும் 1:26 நிமிட வீடியோ ஒன்று பாஜக ஆதரவாளர்கள் பலரால் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

Archive Link

Archive Link

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், Reddit என்னும் சமூக வலைதளப் பக்கத்தில் “Our unity is centuries old’: Hindu ritualistic dance Theyyam begins with an Islamic prayer” என்னும் தலைப்பில் இவ்வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. மேலும் ஜனவரி 11, 2023 அன்று AbbakkaHypatia என்ற ட்விட்டர் பக்கத்திலும் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இதுகுறித்து தேடியதில், ​​16 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையிலும் வைரலான வீடியோவில் உள்ள காட்சிகள் கொண்ட கட்டுரை வெளியிடப்பட்டிருந்தன. அதில் “இஸ்லாமிய தொழுகையுடன் தொடங்கும் இந்து சடங்கு நடனம் ஆடும் தெய்யத்தின் நிகழ்ச்சி இது என்றும், தெய்யம் என்பது பொதுவாக வடக்கு கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் நிகழ்த்தப்படும் ஒரு சடங்கு நடனம் என்றும்” கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘MediaoneTV Live‘ என்னும் யூடியூப் சேனல் வைரலாகி வரும் வீடியோவை 2022 டிசம்பர் 23 அன்று வெளியிட்டுள்ளது. அதில் காசர்கோட்டில் இருந்து தெய்யம் காட்சிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று ‘Samayam Varthakal‘ என்ற மற்றொரு யூடியூப் சேனலும் 24 டிசம்பர் 2022 அன்று பதிவேற்றியுள்ள 2:09 நிமிட மொத்த வீடியோவில், 0:31 நிமிடத்தில் வைரலாகும் வீடியோவின் பகுதிகளைக் கொண்டுள்ளது. அந்த வீடியோவின் தலைப்பில் ‘பப்பிரியன் மணிச்சி தெய்யம்‘ என்று அந்த நடனத்தின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது.

Malayalam Samayam டிசம்பர் 24, 2022 அன்று வெளியிட்டுள்ள கட்டுரையிலும் “பப்பிரியன் தெய்யம் மற்றும் மணிச்சி தெய்யம்” என்று குறிப்பிட்டு அதே வீடியோவை வெளியிட்டுள்ளது.

வடகேரளா மற்றும் கர்நாடகாவில் ஆடப்படும் இந்து இஸ்லாமிய ஒற்றுமையை வலியுறுத்தும் தெய்யம் என்னும் நடன சடங்கின் வீடியோவை, மதரீதியாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

முடிவு:

நம் தேடலில், வட கேரளாவில் வழக்கமாக இஸ்லாமிய பிரார்த்தனையுடன் தொடங்கும் தெய்யம் என்னும் இந்து நடன சடங்கின் வீடியோவை இந்து கோவில்களில் கேரள அரசு முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்களை நியமித்ததாக கூறி தவறாகப் பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni is working as a Sub-Editor in You Turn. She completed her Masters in History from Madras university. She holds her Bachelor’s degree in Engineering and holds a Bachelor’s degree in Tamil Literature. She is the former employee of IT Company. She currently finds the fake news in social media in order to verify the factual accuracy.
Back to top button