This article is from Mar 14, 2021

கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்குவதாக திமுக தேர்தல் அறிக்கையா ?| அரசாணையே வெளியிட்ட அதிமுக !

பரவிய செய்தி

திமுக தேர்தல் அறிக்கை, பக்கம் 112: பத்தி 419: கோயில்களுக்கு சொந்தமான மனைகளில் நீண்டகாலமாக குடியிருப்போருக்கு அந்த நிலங்களை வழங்க ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் உயர்நிலை குழு. பக்கம் 85: பத்தி 295 : வக்ப் வாரிய நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும். இந்துவே உன்னிடம் உணர்வு இல்லையென்பதாலே முட்டாள்கள் எல்லாம் இப்படி தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள்.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்துக் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் நீண்டகாலமாக குடியிருப்போருக்கு அந்த நிலங்களை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர்நிலை குழு அமைப்பதாகவும், அதுவே வக்ப் வாரிய நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும் என  திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பக்கம் மற்றும் அம்சத்தின் எண்களுடன் கூடிய இந்த மீம் பதிவு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கோயில் நிலங்களை பிறருக்கு வழங்குவதாக கூறி விட்டு வக்ப் வாரிய நிலங்களை மட்டும் பாதுகாப்பதாக கூறி இருக்கிறார்கள், ஏன் இந்த பாகுபாடு என பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

2021 சட்டசபை தேர்தலுக்காக திமுக தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சில நாட்களில் இந்த மீம் பதிவு வைரல் செய்யப்பட்டு வருகிறது. திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பக்கங்களை பார்க்கையில், அவற்றில் அவ்வாறான எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என அறிய முடிந்தது.

ஆனால், இந்த மீம் பதிவை இதற்கு முன்னால் கூட பகிர்ந்து இருக்கிறார்கள் என தெரிய வந்தது. இதையடுத்து, தேடிப் பார்க்கையில் 2016-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதிகள் இருப்பதாகக் கூறும் பதிவுகளை கண்டோம்.

2016-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் 419வது அம்சத்தில், ” கோயில் நிலங்களிலிருந்து அரசுக்கு வந்து சேர வேண்டிய குத்தகையைக் காலந்தவறாமல் முறைப்படுத்தி வசூல் செய்வதோடு, கோயில்களுக்குச் சொந்தமான காலி இடங்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றைக் கோயில்களுக்கு நல்ல வருவாய் ஈட்டக்கூடிய வகையில் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக ” நில வங்கி ” (land bank) ஒன்று நிறுவப்படும். மேலும், கோயில்களுக்குச் சொந்தமான மனைகளில் நீண்டகாலமாகக் குடியிருப்போர், அந்த மனைகளைத் தங்களுக்குக் கிரையம் செய்துதர வேண்டுமென்று கேட்டு வருவது குறித்து, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுப் பரிசீலிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்படும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 295வது அம்சத்தில், வக்ஃபு வாரியச் சொத்துக்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்டுப் பாதுகாக்கப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோவில் நிலங்களில் நீண்டகாலமாக குடியிருப்பவர்களுக்கென்று சங்கமே இருக்கிறது. கோவில் மனைகளில் நீண்டகாலமாகக் குடியிருப்பவர்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்டகாலமாக முன் வைத்து வருகின்றனர்.

2016-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் கோவில் நிலங்களில் குடியிருப்போர் தங்களுக்கு நில பட்டா வழங்க வேண்டும் என முன்வைக்கும் கோரிக்கையை பரிசீலிக்க திமுக உயர்நிலை குழு அமைக்கப்படும் என அறிவித்து இருந்தனர். ஆனால், 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்கிட வருவாய்த்துறை சார்பில் அரசாணையே வெளியிடப்பட்டது.

ஆனால், அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்ற அரசாணை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் இடைக்கால தடையாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, தமிழகம் முழுவதும் உள்ள கோவில் நிலங்களில் 19 ஆயிரத்து 717 குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்களில் 600 ஏக்கர் நிலங்களை மட்டுமே ஏழைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது என 2019ம் ஆண்டு செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், கோயில்களுக்கு சொந்தமான மனைகளில் நீண்டகாலமாக குடியிருப்போருக்கு அந்த நிலங்களை கிரையம் செய்வது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்படும் என்றும், வக்ஃபு வாரியச் சொத்துக்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் என்றும் திமுக குறிப்பிட்டது 2016 சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கை.

ஆனால், அதை தற்போதைய தேர்தல் உடன் தொடர்புபடுத்தி பரப்பி வருகிறார்கள். மேலும், 2019ல் அதிமுக ஆட்சியில் கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க அரசாணையே பிறப்பிக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader