இந்து பெண்ணிற்குப் போதை மருந்துக் கொடுத்த இஸ்லாமிய மதகுரு எனப் பரப்பப்படும் பொய்யான வீடியோ

பரவிய செய்தி

இந்து பெண்ணுக்கு இஸ்லாமிய மௌலானா ஒருவர் போதைப் பொருள் கொடுத்து தவறாக நடந்து கொண்டுள்ளார். அப்போது இந்து செயல்பாட்டாளர் ஒருவர் அவரை கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

வலதுசாரி ஆதரவாளரான கிஷோர் கே சாமி 2022, செப்டம்பர் 15ம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், இந்து பெண் ஒருவருக்கு இஸ்லாமிய மௌலானா போதைப் பொருள் கொடுத்து தவறாக நடந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த முதியவர் தவறாக நடந்து கொள்ளும் போது இந்து செயல்பாட்டாளர் அவரை கையும் களவுமாக  பிடித்துள்ளதாக டிவீட் செய்துள்ளார். 

45 நொடிகள் கொண்ட வீடியோவில், அரை மயக்க நிலையில் ஒரு பெண் இருப்பதும், இஸ்லாமிய முதியவரிடம் இந்து செயல்பாட்டாளர் என்று சொல்லப்படுகிற நபர் நீ யார், எதற்கு இப்படிச் செய்கிறாய் எனக் கேள்வி கேட்கிறார்.

உண்மை என்ன ?

பரப்பப்படும் வீடியோவிலுள்ள முதியவரின் படத்தினை ஸ்கிரீன்சார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். அது தொடர்பான முழுமையான வீடியோ “வந்தே மாதரம் ஜன் சேவக் சங்கம்” என்ற பேஸ்புக் குழுவில் கிடைக்கப் பெற்றது. அக்குழுவில் இந்த வீடியோ கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஷேக் அஸ்லாம் என்ற பேஸ்புக் ஐடி-யில் இருந்து பதிவிடப்பட்டுள்ளது. 

இதே வீடியோ “எதிர்கால இந்து ராஷ்டிரத்தை உருவாக்குபவர் மாண்புமிகு மோடிஜி” என்ற பேஸ்புக் குழுவிலும் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவும் ஷேக் அஸ்லாம் என்ற பேஸ்புக் ஐடி-யில் இருந்தே செப்டம்பர் 12ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. 

ஷேக் அஸ்லாம் பதிவிட்டுள்ள வீடியோ 11 நிமிடம் 52 வினாடிகள் கொண்டுள்ளது. அப்பதிவில், குழந்தை இல்லாத பெண்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவர்களுக்கு போதைப் பொருள் கொடுத்து மயக்க நிலையில் அவர்களிடம் தவறாக நடந்து கொள்ளும் மௌலானா என எழுதப்பட்டுள்ளது.

ஆனால், வீடியோவின் கடைசியில் 2 வினாடிகளுக்கும் குறைவான நேரத்திற்கு ஒரு பொறுப்புத் துறப்பு போடப்பட்டுள்ளது. அதில் “ இந்த வீடியோவில் உள்ள அனைத்தும் கற்பனையே. உண்மையில் நடைபெறுவதைச் சொல்லவோ, காட்டவோ முடியாத நிலையில் உள்ளது” என எழுதப்பட்டிருக்கிறது. 

சுமார் 12 நிமிடங்கள் கொண்ட கற்பனையாக சித்தரித்து எடுக்கப்பட்ட வீடியோ மதரீதியான பிரிவினை தூண்டும் வகையில் உள்ளதை அறிய முடிகிறது. அதிலும் 45 வினாடி மட்டும் எடிட் செய்து பொறுப்புத் துறப்பு கூட இல்லாமல் பகிர்வது மேலும் வன்மமான செயலாகவே உள்ளது. 

மேலும் படிக்க : கேரளாவில் முஸ்லீம் மாணவிகள் ஓணம் கொண்டாடுவது ஹராம் எனக் கூறி மத அடிப்படைவாதிகளால் விரட்டப்பட்டனரா ?

வலதுசாரி ஆதரவாளரான கிஷோர் கே சாமி இதே போன்று கடந்த செப்டம்பர் 5ம் தேதி கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய முஸ்லீம் மாணவிகளை ஹராம் எனக் கூறி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் விரட்டி அடித்த காட்சி எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டு இருந்தார். இது வதந்தி என யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.

முடிவு :

நம் தேடலில், இந்து பெண்ணுக்கு இஸ்லாமிய மதகுரு ஒருவர் போதைப் பொருள்  கொடுத்து  தவறாக நடந்து கொண்டதாக, வலதுசாரி ஆதரவாளர் கிஷோர் கே சாமியால் பகிரப்பட்ட வீடியோ உண்மையானது அல்ல எனத் தெரிய வருகிறது. அது அனைத்தும் சித்தரித்து எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader