முஸ்லீம்கள் பகுதியில் இந்துக்களை நுழைய விடவில்லை என வலதுசாரிகள் தவறாகப் பரப்பும் சித்தரிப்பு வீடியோ !

பரவிய செய்தி
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஏரியாக்களில் இந்துக்கள் நுழைய கூடாதுனு சொல்லி அந்த அப்பாவி ஹிந்துவை அடித்து விரட்டுகிறான் மதவெறி ஜிஹாதி..
மதிப்பீடு
விளக்கம்
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இந்துக்கள் நுழையக் கூடாது என்பதற்காக ஒரு அப்பாவி இந்துவை மதவெறி கொண்ட ஒருவன் அடித்து விரட்டுகிறான் என்று கூறி 56 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்படுகிறது.
மேலும் அந்த வீடியோவில் காவிநிறத் துண்டு அணிந்துள்ள ஒரு நபரை, முஸ்லீம் ஒருவர் அங்கிருந்து விரட்டுவதாகவும், இதைப் பார்த்த பொதுமக்கள் அந்த இடத்தில் கூட்டமாக கூடி அவர்களை சமாதானப்படுத்துவதாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
When a Muslim stands or walks among Hindu majority area, he/she can pass through without anyone stopping/pushing.
But can a Hindu walk through a Muslim majority area without being bothered/pushed away?
Check this video. A Hindu cannot stand/passthrough without being stopped. pic.twitter.com/EvfHKeBZUM
— Tathvam-asi (@ssaratht) August 7, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவின் முழுத் தொகுப்பை “PM 2 Vlogs” என்ற யூடியூப் பக்கத்தில் காணமுடிந்தது. “இந்து சகோதரன் மீண்டும் முஸ்லிம் சகோதரனால் துரத்தப்படுகிறான். சமூக பரிசோதனை| இந்து முஸ்லிம் | இந்து | முஸ்லிம் | ஊடகம்” என்னும் தலைப்பில் இந்த வீடியோ கடந்த ஜூலை 26 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிய, “PM 2 Vlogs” என்ற யூடியூப் பக்கத்தின் விவரங்களை ஆய்வு செய்தோம். அதில் “வணக்கம் நண்பர்களே, வீடற்றவர்களுக்கு நான் உதவுகிறேன், மேலும் சமூக பரிசோதனைகளையும் (Social Experiment) செய்கிறேன். எங்கள் உள்ளடக்கத்தை நீங்கள் விரும்பினால், லைக் பட்டனை அழுத்தி எங்கள் சேனலுக்கு ஆதரவு அளியுங்கள். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் அவர் தன்னுடைய பக்கத்தில் பல சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை பதிவு செய்துள்ளார் என்பதை அறிய முடிந்தது.
மேலும் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ, இந்த வீடியோவுடன் சரியாக 12:24 வது நிமிடங்களில் இருந்து அப்படியே பொருத்துவதையும் காண முடிந்தது.
இறுதியில், அந்த வீடியோவில் நடித்துள்ள இருவரும் பொதுமக்களிடம் கேமரா இருப்பதை சொல்வதையும், பின்னர் பொதுமக்கள் அனைவரும் கேமராவைப் பார்த்து பேசுவதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
இதன் மூலம் பொது இடங்களில் இந்து முஸ்லீம்களுக்கு இடையே ஏதாவது சண்டை வந்தால், பொதுமக்கள் வெறும் வேடிக்கை மட்டும் பார்த்து கடந்து செல்கிறார்களா அல்லது மனித நேயத்துடன் அவர்களிடம் வந்து சமாதானம் செய்து பிரச்சனையை தீர்த்து வைக்கிறார்களா என்பதை ஆய்வு செய்யவே இந்த சித்தரிக்கப்பட்ட வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்பதை இந்த வீடியோவின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும் படிக்க: பாஜகவைச் சேர்ந்தவர் தனது இரண்டு மகள்களைத் திருமணம் செய்ய முயன்றதாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ
மேலும் படிக்க: பூஜை என்ற பெயரில் பெண்களிடம் தவறாக நடப்பதாக வைரலாகும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!
முடிவு :
நம் தேடலில், முஸ்லீம்கள் வாழும் பகுதியில் இந்துக்களை நுழைய விடவில்லை என சமூக வலைதளங்களில் வலதுசாரிகளால் பரப்பப்படும் வீடியோ உண்மையானது அல்ல என்பதையும், அது இந்து முஸ்லீம் மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலிப்பதற்காக எடுக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.