This article is from Nov 13, 2019

HIV நோயாளியின் இரத்தம் பவண்டோ குளிர்பானத்தில் கலந்ததா ?

பரவிய செய்தி

தமிழ்நாடு காவல்துறை அதிர்ச்சி தகவல் !

யாரும் பவண்டோ (bovonto) குளிர்பானத்தை வாங்க வேண்டாம் என்று தெரிவித்து உள்ளது. ஏனென்றால், அந்த கம்பெனியில் வேலை செய்யும் ஒருவரின் இரத்தம் ஒரு பாட்டிலில் கலந்து விட்டது. முக்கியமானது, என்னெவென்றால் அவர் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர். முடிந்தவரை, ஒரு மாதம் வரை யாரும் வாங்க வேண்டாம் என்று தெரிவித்து உள்ளார்கள். இதே செய்தியை ஆங்கில செய்தி தொலைக்காட்சியான NDTV-யும் நேற்று ஒளிபரப்பியது. ஆகையால், நண்பர்களே முடிந்தவரை உங்களுடைய அனைத்து வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு பகிருங்கள்.

 

மதிப்பீடு

விளக்கம்

மிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் பிரபல குளிர்பான தயாரிப்பான பவண்டோ குளிர்பானத்தில் ஹெச்.ஐ.வி வைரஸ் பாதித்த நோயாளியின் இரத்தம் கலந்து விட்டதால், மக்கள் யாரும் அந்த குளிர்பானத்தை வாங்க வேண்டாம் என தமிழக காவல்துறை அறிவித்து உள்ளதாக ஒரு தகவல் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Facebook post | archived link 

பவண்டோ குளிர்பானத்தில் ஹெச்.ஐ.வி நோயாளியின் இரத்தம் கலந்து விட்டதாக செய்திகள் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்தே வைரலாகி இருக்கிறது . இதன் உண்மைத்தன்மையை  அறிந்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

பிரபல குளிர்பான தயாரிப்புகள், சாக்லேட்கள் உள்ளிட்டவையில் ஹெச்.ஐ.வி வைரஸ் பாதித்த நோயாளியின் ரத்தம் கலந்து விட்டதாக எச்சரிக்கை செய்யும் ஃபார்வர்டு செய்திகள் வெளியாவது முதல் முறை அல்ல.

பவண்டோ குளிர்பானத்தில் NDTV செய்தி நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டது போன்று, பவண்டோவிற்கு பதிலாக மாஸா குளிர்ப்பானத்தில் ஹெச்.ஐ.வி வைரஸ் பாதித்த நோயாளியின் ரத்தம் கலந்து விட்டதாக ஃபார்வர்டு செய்திகள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகின. இரண்டிற்கும் ஒரே பார்மெட்.

இப்படி NDTV செய்தி நிறுவனத்தின் பெயரில் போலியான செய்திகள் சமூக வலைதளங்களில்  வலம் வருவதாக 2016-ம் ஆண்டில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் ” Drink your Mazaa in peace…there are no deadly viruses in it! ” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

மேலும் படிக்க : Cadbury தயாரிப்புகளில் HIV நோயாளியின் இரத்தம் கலந்ததா ?

இதற்கு முன்பாக, பிரபல சாக்லேட் தயாரிப்பான Cadbury சாக்லேட்களில் எய்ட்ஸ் நோயாளியின் இரத்தம் கலந்து விட்டதாகவும், அதற்கு காரணமாக இருந்தவரை காவல்துறை கைது செய்ததாகவும் தவறான புகைப்படங்கள் மூலம் வதந்தியை பரப்பி இருந்தனர். அதை விரிவாக, ஆதாரத்துடன் நாம் விவரித்து இருந்தோம்.

ஹெச்.ஐ.வி வைரஸ் : 

Centers of Disease Control and Prevention (CDC), ஹெச்.ஐ.வி வைரஸால் நீண்ட காலம் மனிதர்களின் உடலில் இருந்து வெளியேறிய இரத்தம், வேர்வை, திரவம், கண்ணீர், எச்சில் போன்றவற்றில் தொடர்ந்து வாழ இயலாது. பரிசோதனை ஆய்வகத்தில், உடலில் இருந்து வெளியேறி வெளிப்புற பகுதிகளில் வைரஸால் வாழ முடியவில்லை மற்றும் அவற்றால் பரவ இயலவில்லை என்று கூறியுள்ளனர்.

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, பவண்டோ குளிர்பானத்தில் ஹெச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டவரின் இரத்தம் கலந்து விட்டதாக பரவி வரும் தகவல் வதந்தியே என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இதற்கு முன்பாக, Mazaa குளிர்பானத்தின் பெயரில் பரவிய ஃபார்வர்டு செய்தியில் பவண்டோவின் பெயரை மாற்றி பரப்பி வருகின்றனர். இது உலகம் முழுவதும் பரப்பப்படும் வதந்தி என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற, ஃபார்வர்டு தகவல்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader