This article is from Jan 30, 2019

தமிழகத்தில் காவிரி குடிநீர் குழாய் இணைப்பில் சேதமா ?| வைரல் வீடியோ.

பரவிய செய்தி

ஒகேனக்கல் பகுதியில் உள்ள தண்ணீர் குழாய்கள் சேதமடைந்து காவிரி நீர் வீணாகிறது.

மதிப்பீடு

சுருக்கம்

தெலங்கானாவில் செயல்படுத்த உள்ள மிஷன் பகிரத்தா என்ற திட்டத்தில் உருவாக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் ஆர்ப்பரிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ தமிழ்நாட்டில் நிகழ்ந்ததாக வதந்தியாகப் பரப்பி வருகிறது.

விளக்கம்

குடிநீர் திட்டத்திற்கு உருவாக்கப்பட்ட தண்ணீர் குழாய் இணைப்புகள் உடைந்து மிக நீண்ட உயரத்திற்கு தண்ணீர் மேலெழும்பும் காட்சிகள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகே ஒகேனக்கல் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து காவிரி நீர் வீணாகிறதாக பகிரப்படுகிறது. ஆனால், அச்செய்தி வதந்தியே.

தமிழகத்தின் ஒகேனக்கல் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் இணைப்புகள் சேதமடைந்ததாகப் பரவும் வீடியோக்கள் தெலங்கானா மாநிலத்தில் குடிநீர் திட்டத்தின் குழாய்கள் உடைந்த போது எடுக்கப்பட்ட வீடியோ.

மிஷன் பகிரத்தா : 

கிருஷ்ணா நதிநீர் மூலம் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கிராமங்களுக்கு 100 லிட்டர் அளவிற்கும், நகர்ப்புறங்களுக்கு 150 லிட்டர் அளவிற்கு குடிநீர் வழங்க 35,000 கோடி செலவில் 1.26 லட்ச கி.மீக்கு தண்ணீர் குழாய் இணைப்புகள் மிஷன் பகிரத்தா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன. பாதுகாப்பான முறையில் அணைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

மிஷன் பகிரத்தா திட்டம் செயல்படுத்திய பின் மாநிலத்தில் எப்பகுதியிலும் ஒருவரையும் கூட தண்ணீருக்காக பானையுடன் காத்திருப்பதைப் பார்க்க இயலாது என தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்து இருந்தார்.

2019 ஜனவரி 27-ம் தேதி தெலங்கானாவின் மகாபுப்நகர் மாவட்டத்தின் மேடிபூர் கிராமத்தின் அருகே தாடூர் மண்டல் சாலையில் மிஷன் பகிரத்தா திட்டத்தில் உருவாக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் உடைந்து தண்ணீர் ஆர்ப்பரித்து உள்ளது.

தண்ணீர் குழாய் உடைந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பால் பல கேலன்கள் அளவிற்கு தண்ணீர் வீணாகியதாகக் கூறப்படுகிறது.

எனினும், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் உடைந்த பகுதிகளை நீண்ட நேரத்திற்கு பிறகு சரி செய்து விட்டதாகக் தெலங்கானா குடிநீர் வாரியம் கூறியுள்ளது. மேலும், இதனால் தண்ணீர் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும், குடிநீர் இணைப்பில் குழாய்கள் உடைந்தது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஹைதராபாத் பெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த குடிநீர் குழாய் சேதத்தை தமிழ்நாட்டில் ஒகேனக்கல் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய்களில் ஏற்பட்டதாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர். கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் இதனைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதேபோன்று திருச்சிப் பகுதியில் காவிரி நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாகவும், இங்குள்ளவர்கள் கர்நாடகாவில் காவிரி நீர் குழாய்கள் உடைந்ததாகவும் இதே வீடியோ தவறாகப் பகிர்கின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader