வீரர்கள் இருக்கும் குதிரை சிலையின் நிலைகளில் மரபு உள்ளதா ?

பரவிய செய்தி

குதிரையின் மேல் வீரர்கள் அமர்ந்து இருக்கும் சிலைகளை நிறுவும் விடயத்தில் ஒரு மரபு இருக்கிறது. குதிரையின் நான்கு கால்களும் கீழ் ஊன்றி இருந்தால் அந்த வீரன் இயற்கையாக மரணம் அடைந்தான் என்று பொருள். குதிரையின் ஒரு கால் தூக்கிய நிலையில் இருந்தால், அந்த வீரன் போரில் காயமடைந்து, பிறகு இறந்தவன் என்று அர்த்தம். முன்னங்கால்கள் இரண்டும் தூக்கிய நிலையில் இருந்தால், அந்த வீரன் போரில் வீர மரணம் அடைந்தவன் என்று அர்த்தம்.

மதிப்பீடு

சுருக்கம்

வீரர்கள் குதிரையுடன் இருக்கும் சிலையில் மரபுகள் இருப்பதாகக் கூறப்படுவது நீண்டகால கட்டுக்கதையாகும். அவற்றை நிரூபிக்க சில உதாரணங்களை ஒன்றன்பின் ஒன்றாக காண்போம்.

விளக்கம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரசர்கள், வீரர்களுக்கு குதிரையில் அமர்ந்து இருக்கும் சிலைகள் நிறுவுவது உலக முழுவதிலும் உள்ள வழக்கம். அவ்வாறு நிறுவும் சிலைகள் குதிரையுடன் அமைக்கப்படும் பொழுது அதற்கென மரபுகள் இருப்பதாகவும், குதிரையின் கால்களின் நிலைக்கு அர்த்தங்கள் இருப்பதாகவும் நீண்டகாலமாக ஒரு விளக்கம் கூறப்படும்.

Advertisement

அவ்விளக்கம் தமிழகத்தில், இந்தியாவில் என இங்கு மட்டும் கூறப்படுவதில்லை, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இந்த விளக்கம் உண்மை என்றே நினைத்து வருகின்றனர். ஆனால், அத்தகைய கூற்றிற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆவணங்களோ அல்லது தகவல்களோ இல்லை. எனினும், குறிப்பிட்ட சில சிலைகளில் மட்டும் இந்த கூற்று ஒத்துப் போகிறது. பலவற்றில் எதிராக அமைந்து உள்ளது.

உதாரணங்கள் :

அமெரிக்காவில் இருக்கும் சிலைகளை எடுத்துக் கொள்கையில், Lafayette Park-ல் அமைந்து இருக்கும் Andrew Jackson உடைய சிலையில் குதிரையின் இரு கால்களும் முன்னோக்கி தூக்கி இருக்கும். ஆனால், அவர் போரில் இறக்கவில்லை.

வாஷிங்டன் பகுதியில் அமைக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டன் உடைய சிலையில் குதிரையின் ஒரு கால் மட்டும் தூக்கி இருக்கும். அதன்படி பார்த்தால், அவர் போரில் காயப்பட்டு , பின் இறந்தார் எனக் கூறுவதில் உண்மை இல்லை. அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

Advertisement

லண்டனில் விக்டோரியாவில் இருக்கும் Ferdinand Foch என்பவரது சிலையில் குதிரையின் நான்கு கால்களும் கீழே இருக்கும். முதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரெஞ்சு வீரரான Ferdinand Foch நீண்ட காலம் வாழ்ந்து, தீவிர காயங்கள் இன்றி மரணித்தார். இந்த சிலைக்கு கூற்றானது ஒத்துப் போகிறது.

செங்கிஸ்கான் :

Tsonjin Boldog பகுதியில் மங்கோலிய அரசரான செங்கிஸ்தான் உடைய 131 அடி உயர சிலை உலகிலேயே உயரமான குதிரை வீரர் சிலையாக உள்ளது. இது இரும்பிலானது. அந்த சிலையில் குதிரையின் கால்கள் நான்கும் தரையில் இருக்கும்.

ஆனால், செங்கிஸ்கான் இறப்பானது, போர் களத்தில் நிகழ்ந்தது, காயப்பட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு நிகழ்ந்தது, நோய்வாய்ப்பட்டு இருந்தார் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் கூறுகின்றனர். அதன்படி பார்த்தால், பரவிய மரபு கூற்றில் மூன்றுமே இவருக்கு பொருந்துகிறது . ஆனால், சிலையில் பொருந்தவில்லை.

சத்ரபதி சிவாஜி :

மராத்திய மன்னரான சத்ரபதி சிவாஜி உடைய சிலைகள் குதிரையின் மீது அமர்ந்திருக்கும்படி அமைக்கப்பட்டு இருக்கும். அதில், குதிரையின் ஒற்றைக் கால் மட்டும் தூக்கி இருக்கும். கூற்றுப்படி பார்த்தால், சிவாஜி அவர்கள் போரில் காயப்பட்டு, பிறகு இறந்தார் என அர்த்தம். ஆனால், 1680-ல் சத்ரபதி சிவாஜி நோய்வாய்ப்பட்டு இறந்தார் என கூறப்படுகிறது.

முடிவு :

சிலைகளின் மரபு எனக் கூறப்படும் விளக்கமானது பல நாடுகளில் அதிகம் நம்பப்பட்டவை. Londonist என்ற இணையதளத்தில் லண்டனில் உள்ள 15 சிலைகளுடன் ஒப்பீடு செய்ததில் 9 சிலைகளுடன் மட்டுமே குறியீடானது ஒத்துப் போகிறது.

சிலைகளின் நிலை பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்க வேண்டும் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலையில் அமைத்து இருக்கலாம். ஆனால், அதற்கு பின்னால் மரபு உள்ளது என்பது கிடைத்த ஆதாரங்களின்படி தவறான தகவல் என்றே பொருள்படுகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button