This article is from Jul 06, 2021

மருத்துவமனையில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டவர் மறைந்த ஸ்டேன் சுவாமி இல்லை !

பரவிய செய்தி

திருச்சியில் பிறந்த ஸ்டான் சாமி கிறிஸ்தவ பாதிரியார் ஆவார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்தபடி பழங்குடியினர் & தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல்
கொடுத்தவர். உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்தவர் நேற்று மறைந்தார்.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுத்து வந்த மனித உரிமைகள் செயல்பாட்டாளரான தமிழகத்தைச் சேர்ந்த பாதர் ஸ்டேன் சுவாமி உடல்நிலை மோசமடைந்த நிலையில் ஜூலை 5-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் இறப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக வலைதளவாசிகள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஸ்டேன் சுவாமியின் நிலை என வயதான முதியவர் மருத்துவமனை படுக்கையில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2021 மே மாதம் என்டிடிவி இணையதளத்தில் வெளியான செய்தியில், உத்தரப் பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் சிகிச்சையின் போது 92 வயதான கைதியை அவரது மருத்துவமனை படுக்கையில் சங்கிலியால் கட்டி வைத்ததற்காக சிறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதாக ” இதே புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

புகைப்படத்திற்கு கீழே கொலை வழக்கு கைதி பாபுராம் சிங் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியா டுடே உள்ளிட்ட பல செய்திகளில் 92 வயதான கைதி என பாபுராம் சிங் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், மருத்துவமனை படுக்கையில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர் மறைந்த ஸ்டேன் சுவாமி இல்லை. அந்த புகைப்படத்தில் இருப்பவர் 92 வயதான பாபுராம் சிங் எனும் கைதி. உத்தரப் பிரதேசத்தில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader